வெள்ளி, 31 மே, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130531


டான்ஸ் பாடல்  1

"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்..."

ஆரம்பதாளம் 'ஆஹா' என்று உங்களையும் ஆட வைக்கும். முடியும்போதும் அப்படியே! "அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை என்று ஆரம்பத்தில் வரும்போது அபிநயத்தைக் கவனியுங்கள்!!  ஒல்லி கன்னடத்துப் பைங்கிளி!  TMS குரலில் துள்ளல்!


செவ்வாய், 28 மே, 2013

ஜெயமோகனும் வாலியும்...


வாழ்க்கைல கேள்விங்க சகஜங்க... ரோட்ல நடக்கறப்போ எதிர்ல வர்றவங்க 'டைம்' கேக்கற கேள்விகள்ல தொடங்கி, ஆஃபீஸ்ல, ஹோட்டல்ல பஸ்ல, அட அது ஏன், அவிங்கவங்க வூட்லயே எத்தனை கேள்விங்களைச் சந்திக்கிறோம்? எல்லாத்துக்கும் எல்லோராராலயும், எப்பவும் பொறுமையா பதில் சொல்ல முடியுமா என்ன?

பிரபலமானவிங்க கிட்ட சாதா ஜனம் கேள்விகள் கேட்கலாம். சாதா ஜனம் கிட்ட பிரபலங்கள் கேள்விகள் கேட்கலாம். பிரபலங்கள், பிரபலங்கள் கிட்டயேயும், சாதா ஜனம் சாதா ஜனத்து கிட்டயேயும் கேள்வி கேட்கலாம்.


கேள்வி கேக்கற சாக்குல நம்ம ஞானத்தை டாம் டாமடிச்சுக்கலாம். யார்ட்ட கேக்கறோமோ, அவிங்களை விட அல்லது அவிங்களுக்கு தெரியாத ஒண்ணு எனக்குத் தெரிஞ்சிருக்குன்னு காட்டிக்கலாம்.


கேள்விங்க பொறாமையால இருக்கலாம்... தன்னை விளம்பரப்படுத்திக்க இருக்கலாம். வெறுப்பேத்தன்னே கூட இருக்கலாம்!


இது மாதிரிக் கேள்விங்களை யாரு, எப்படி ஹேண்டில் செய்றாங்கங்கறதுலதான் மேட்டரு... இன்னா சொல்றீங்க?


கோவப் படுவாய்ங்க சில பேரு... பேசாமப் பூடுவாய்ங்க சில பேரு... நல்லா பதில் குடுத்துட்டுப் போவாய்ங்க சில பேரு.. இன்னும் சில பேரு அடிக்கவே அடிச்சுடுவாய்ங்க...


என்னியக் கேட்டா, மௌனமாப் பூடுவேன்... நம்மளை முட்டாள்னும் நினைக்கலாம், ஞானின்னும் நினைக்கலாமே...!!!


இப்ப இதெல்லாம் எதுக்குன்னுதானே கேக்கறீய.. இதோ.. அத்தச் சொல்லத்தானே வாரேன்...


இவரு இவரோட அனுபவத்தை இங்கே
சொல்லியிருக்கறதைப் பத்தித்தாங்க முகநூல்ல ஒரே டிபேட்டு... ஆளாளுக்குக் கருத்து மழை பொழியறாய்ங்க...

நமக்குக் கருத்து, கருமாந்தரம் ஏதும் இல்லீங்க... கருத்து சொல்ல நாம யாரு.... இதே மாறிப் படிச்ச வேற ஒண்ணு கியாபகத்துக்கு வந்துடுச்சுங்க.. இருங்க... ஏலே... முன்சாமி... அந்த புக்கை எடுறா... அதில்லடா... பக்கத்துல இருக்கு பாரு, பளபளன்னு தங்கக் கலர்ல... வாலி ஐயா படம் போட்டு... அதான்...ஆங்... ஐயா...அம்மா.. படிக்கிறேன் கேளுங்க... மேட்டரு கொஞ்சம் பெரிசா இருந்தா மன்னிச்சுப் போடுங்க... ஆனா பாதில போயிடாதீங்க..ஆமாம், சொல்லிட்டேன்!


.......விஸ்தாரமான அந்த வெட்ட வெளியில் அந்த விருந்து நடந்து கொண்டிருந்தது. ஒரு மேஜையைச் சுற்றி, நானும், முத்தமிழ்க் கலா வித்தகர் ரத்னா திரு. டி.கே. சண்முகம், திரு டி கே பகவதி ஆகியோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.


அப்போது, அங்கே ஒரு தமிழன்பரும் வந்து அமர்ந்து கொண்டார். அவர் இன்னாரென்று எனக்குத் தெரிந்தாலும், முறையான அறிமுகம் கிடையாது. அறிமுகமில்லாதவர்களோடு, முந்திரிக்கொட்டை போல நானே முந்திக் கொண்டு வம்பளப்பது எனக்கு உடன்பாடல்லாத விஷயம்.


வந்தவர், சண்முகம் அன்னாச்சியோடும் பகவதி அண்ணாச்சியோடும் வார்த்தையாடலானார். அப்போது சண்முகம் அண்ணாச்சி அவர்கள், என்னை அவரிடம், "இவர்தான் கவிஞர் வாலி" என்று அறிமுகப் படுத்தினார். அவரையும் இன்னாரென்று எனக்கு எடுத்துக் கூறினார். பரஸ்பர வணக்கங்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம்.


பொதுவாக, அந்த நபருக்கு என்னை அவ்வளவாகப் பிடிக்காது. நான் ஒரு பாவமும் அறியேன்; இருந்தும் நான் சினிமாவில் வெற்றி பெற்றது குறித்து அவருக்கு ஒருவித உளைச்சலும், நமைச்சலும் உள்ளத்தில் உண்டு என்பதை, நான் பிறர் சொல்லத் தெரிந்து வைத்திருந்தேன்.


அவர் சிறுகதைகளும், நாவல்களும் நிறைய எழுதி வரும் பிரபல எழுத்தாளர். சொந்தமாக ஒரு பத்திரிகையும் நடத்தி வந்தார்; த
ன் நாவல் ஒன்று, திரைப்படமாக வந்து விட வேண்டுமென்பதற்காக, அவர் முன்னின்று முயன்று அந்த முயற்சி முளையிலேயே பட்டுப் போனதால், என் போன்ற வெற்றி பெற்ற சினிமா எழுத்தாளர்கள்பால் ஏகப்பட்ட எரிச்சலோடு இருப்பவர்.

                                           
 
"இவனெல்லாம் ஒரு கவிஞனா?" என்று என்னைப் பற்றிய ஒரு கணிப்பை விழிகளில் எப்போதும் ஒட்டி வைத்துக் கொண்டு உலா வருபவர்.

சண்முகம் அண்ணாச்சி என்னை அவரிடம் அறிமுகப்படுத்தியதும், என்னை ஏதோ ஒரு இக்கட்டான கேள்வியைக் கேட்டு திக்குமுக்காட வைக்க வேண்டும் என்று திட்டமிட்டாரோ என்னவோ!


அவர் என்னைப் பார்த்து ஒரு வினாவைத் தொடுத்தார் :


"நீங்க ஏன் ஸார் வாலின்னு பேர் வச்சிக்கிட்டு இருக்கீங்க?"


அவரது உள்நோக்கம் ஓரளவு எனக்குப் புரிந்திருக்கும். நான் பவ்யமாக பதில் சொன்னேன், "ஸார்! நீங்க தழறிஞர்; ராமாயணம் படிச்சிருப்பீங்க! எதிராளி ஒருவன் வாலிக்கு முன்வந்து நின்றால் அவனது பலத்தில் பாதி வாலியை வந்தடையும் என்பது இராமாயண வழக்கு. அதுமாதிரி, எந்த அறிவாளி என்முன் வந்து நின்றாலும், அவரது அறிவின் பாதி என்னை வந்து சேர வேண்டும் என்பதற்காகத்தான், நான் 'வாலி' என்று பெயர் வைத்துக் கொண்டுள்ளேன்; அப்படிப் பலரது அறிவு எனக்குக் கிடைக்கும் என்ற ஆசைதான்!"


இந்த விளக்கத்தைக் கேட்டதும் அவர் ஏளனமாகச் சிரித்து விட்டுப் பேசினார் :


"அப்படிப் பலரது அறிவில் பாதி உம்மைச் சேர்ந்திருந்தால், நீர் இவ்வளவு காலம் பெரிய அறிவாளியாக அல்லவா ஆகியிருக்க வேண்டும்...? உம்மைப் பார்த்தால், அப்படித் தெரியவில்லையே...!"


நான் ஒருவினாடி கூடத் தயங்காமல் அவருக்கு பதிலுரைத்தேன்:


"ஸாரி! நான் இன்னும் என் வாழ்க்கையில் ஒரு அறிவாளியைக் கூடச் சந்திக்கவில்லையே?"


என்னுடைய இந்த பதிலைக் கேட்டதும் சண்முகம் அண்ணாச்சியும், பகவதி அண்ணாச்சியும் எட்டு ஊருக்கு எட்டும்படியாக பலமாகச் சிரித்து விட்டார்கள்.


அந்தத் தமிழ் எழுத்தாளரின் முகம் தொங்கிப் போயிற்று. உடனே என்மீது வேறு ஒரு கணை
யைத் தொடுத்தார்.

"என்னதான் நீர் சினிமாவில் பாட்டு எழுதினாலும், கண்ணதாசன் மாதிரி ஒரு கவியரசர் ஆக முடியாது..."


உடனே நான் சொன்னேன்: "ஸார்! எதற்கு நான் இனிமேல் கவியரசர் என்று ஆகணும்? 'வாலி'ன்னு சொன்னாலே கவியரசு என்றுதானே அர்த்தம்? இதுவும் ராமாயணம் படிச்ச உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே..."


இதற்குமேல் அந்தத் தமிழ் எழுத்தாளர் எங்களுடன் இருக்கப் பிரியப்படாமல் மெல்ல எழுந்து போனார்.


இந்த எழுத்தாளர், மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில் என்னுடன் மோதினார்.


காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் நான் பேசப் போனேன். அந்த விழாவுக்கு என் அருமை நண்பர் திரு எஸ் பி முத்துராமனும் வந்திருந்தார். ஒரு திரைப்பட இயக்குனர் என்ற முறையில், அவர் திரைப்படப் பாடல்கள் பற்றிப் பேச நேர்கையில், என்னை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். நான் முன்னம் சொன்ன தமிழ் எழுத்தாளருக்கு, இது பொறுக்கவில்லை. பேச்சாளர் பட்டியலில் அவரும் ஒருவராக அந்த விழாவுக்கு வந்திருந்தார். இது எனக்குத் தெரியாது.


எனது அருமைச் சகோதரியும், அந்தக் கல்லூரியின் பேராசிரியையும் ஆன, திருமதி அரசு மணிமேகலை அவர்கள் என்னை அழைத்ததால், மற்ற விவரங்கள் எதையும் கேட்டு அறியாமல், அந்தச் சகோதரியின் அன்பு அழைப்பை அப்படியே ஏற்றுக் கொண்டேன்.


அந்தத் தமிழ் எழுத்தாளர் பேச ஆரம்பித்தார்.."இயக்குனர் எஸ் பி முத்துராமன் இங்கே வாலியை புகழ் வாய்ந்த திரைப்படக் கவிஞர் என்று பாராட்டிப் பேசினார்... இதை, நான் முழுமையாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்... வாலி, சில நல்ல பாடல்கள் எழுதி இருந்தாலும், மோசமான பாடல்களைத்தான் அதிகம் எழுதி இருக்கிறார்..." என்று அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, நான் 'மைக்'கை அவர் கையிலிருந்து வாங்கி அவர் குற்றச் சாட்டுகளுக்கு விளக்கம் கொடுக்கலானேன்.


"இவரைப் புகழ்வாய்ந்த தமிழ் எழுத்தாளர் என்று நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இவர் என்னை புகழ் வாய்ந்த திரைப்படக் கவிஞர் என்று ஒப்புக் கொள்ளவில்லை. அதுகுறித்து நான் விசனி
க்கவில்லை. ஆனால், நான் எழுதிய மோசமான பாடல்கள் எவை எவை என்று, இவர் இங்கே சொல்லாமல் பொத்தாம்பொதுவாக இவர் என்மேல் குற்றம் சாட்டுவது நாகரீகம் ஆகாது...  இவ்வளவு பெரிய எழுத்தாளர் எதைக் காக்கத் தவறினாலும் தன்னுடைய இன்ஷியலைக் காக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்... இது நான் சொன்னதல்ல; வள்ளுவன் சொன்னது..." என்று கூறி அமர்ந்தேன்.

மாணவிகளின் கைதட்டல், கொட்டகையைப் பிய்த்துக் கொண்டு போயிற்று. அந்த எழுத்தாளரின் இன்ஷியல் 'நா'. இப்போது அமரராகி விட்ட அவரது பெயரைச் சொல்லாமல் விடுகிறேன். என்னைப் பொ
றுத்தவரையில் இன்றளவும் அவரது எழுத்தின்மீதும் புலமையின் மீதும் அளவிடற்கரிய மதிப்பும் மரியாதையும் உண்டு.

இது ஒரு
புகழ்பெற்றவர் தன்னை எதிர்த்து வந்த ஒரு அறிவாளியையே சமாளித்த நிகழ்ச்சிங்க... இதாங்க என் கியாபகத்துக்கு வந்தது... நாம்படிச்சதை முளுசா கேட்டீகளா? நீங்க என்ன நினைக்கறீக....

திங்கள், 27 மே, 2013

சமர், தினமணி,பாரதியார், இளையராஜா,குமுதம், விகடன், வாலி, கல்கி - வெட்டி அரட்டை

               
"பள்ளித் தல மனைத்தும் கோவில் செய்குவோம்..."

பாரதியின் வரிகள். அதே பாரதியார் தான் "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்..." என்று தொடங்கி, "அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்.." என்றும் பாடியுள்ளார். ஏன் இந்த முரண்பாடு?

இதை நான் கேட்கவில்லை. 'கலாரசிகன்' கேட்கிறார்.

முன்னர் ஒருமுறையும் தினமணி ஞாயிறு பகுதிகளைச் சிலாகித்து எழுதிய ஞாபகம் இருக்கிறது. இப்போது மறுபடியும் பகிர ஒரு விஷயம் கிடைத்து விட்டது!

                                                            
தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில் தமிழ் சம்பந்தமாக எந்த ஒரு விழா நிகழ்வு நடந்தாலும் அதில் தினமணி எடிட்டர் திரு கே எஸ் வைத்தியநாதன் அவர்களைக் கட்டாயம் பார்க்கலாம். நல்ல தமிழ் ஆர்வலர்.

முன்பெல்லாம் தினமணி நாளிதழைப் படிக்கவே தோன்றாது. அதன் எழுத்துருவும், செய்திகளும் 'போர்' அடிக்கும்! ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. அதுவும் ஞாயிறு தினமணியில் படிக்க, சுவைக்க ஏராளமான பகுதிகள். அதில் ஒன்று கலாரசிகன் என்ற பெயரில் திரு கே எஸ் வைத்தியநாதன் எழுதும் பகுதி. பெரும்பாலும் அடுத்த நாள் திங்கள் தினமணியில் வர வேண்டிய  அறிமுகம் பகுதியில் வரவிருக்கும் புத்தகங்கள் பற்றி இருக்கும். கடைசியாக அவர் ரசித்த ஒரு கவிதை அறிமுகம் இருக்கும்.

அந்தப் பகுதியில்தான் இந்த வாரம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார். கேள்வியும் அவருடையது அல்ல! வாலி குமுதத்தில் அந்தக் கேள்வியை எழுப்பி, பதிலும் சொல்லியிருக்கிறாராம்.

முகநூலில் ஜெயராமன் ரகுநாதன் அவர்கள் குமுதம் பற்றிய பழைய நினைவுகளை அசை போட வைத்திருந்தார். குமுதத்தில் அந்தக் காலத்தில் வந்த உடல், பொருள் ஆனந்தி, மின்னல் மழை மோகினி, என்று இன்னும் பல படைப்புகளை நினைவு கூர்ந்திருந்தார். இப்போது குமுதம் பக்கம் போகவே முடியவில்லை என்றும் சொல்லியிருந்தார்.அதுதான் என் அபிப்ராயமும்.  விகடன் கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றும். ஜீவி ஸார் குங்குமம் பத்திரிகையை சிபாரிசு செய்திருந்தார்.

'கே எஸ் வை' குமுதம் சிபாரிசு செய்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள். இசைஞானி இளையராஜா, துக்ளக் ஆசிரியர் சோ, வாலி அவர்களது கட்டுரைகள் வருவதால் என்கிறார். இம்மூவரின் படைப்புகள் குமுதத்தில் வருவதால் நானும் குமுதம் வாங்க எண்ணம்!!

அந்தக் குமுதத்தில் வாலி இந்தக் கேள்வியை எழுப்பி, பதிலும் சொல்லியிருக்கிறாராம். இவர் அவரின் படைப்பிலிருந்து எடுத்துக் காட்டியிருக்கும் வரிகள் இழுக்கின்றன!! "ஒருத்தி ஒரு செருக்கனோடு வாழலாம்; தருக்கனோடு வாழலாம், கெட்டவருக்கனோடு வாழலாம்! ஆனால், எப்போதும் எதையேனும் கிறுக்கு கிறுக்கென்று கிறுக்கும் கிறுக்கனோடு வாழ்தலென்பது தலையைக் கிறுகிறுக்க வைக்கும் விஷயம்!" என்று சொல்லி அந்தக் கேள்விக்கு பதிலைச் சொல்லியிருக்கிறாராம். பதிலையும் கலாரசிகன் எடுத்துப் போட்டிருக்கிறார்.

ஓரிரு வாரம் குமுதம் வாங்கிப் பார்க்க வேண்டும்!

இதே தினமணியில் சொல்வேட்டை என்ற தலைப்பில் நீதியரசர் வெ. இராமசுப்ரமணியன் எழுதும் தொடர் ஒன்று வருகிறது. ஒரு ஆங்கிலச் சொல்லைச் சொல்லி அதற்கு இணையான ஒரு தமிழ் வார்த்தையைச் சொல்லச் சொல்கிறார். அடுத்த வாரம் அந்த வார்த்தையை அலசி, பொருத்தமான வார்த்தையை முடிவு செய்கிறார். உதாரணமாக 'ஆசிட் டெஸ்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'கடுந்தேர்வு' என்ற தமிழ்ச்சொல். அடுத்த வாரம் கேட்டிருப்பது 'லிட்மஸ் டெஸ்ட்' வார்த்தைக்கு தமிழில் என்ன சொல்லலாம் என்று! 'of course' என்ற வார்த்தைக்கு தமிழில் என்ன தேர்ந்தெடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? நிறைய பேர் படித்திருக்கக் கூடும்!

                                                                

இந்த வார கதிரில் வந்திருக்கும், ஜி மீனாக்ஷி எழுதிய 'பிறவிப் பெரும்பயன்' கண்கலங்க வைத்தது. கரு எல்லோருக்கும் தெரிந்த உறுப்பு தானம்,  உடல் தானம் பற்றியதுதான். ட்ரீட்மென்ட் என்று சொல்லப்படும் - கதையை எப்படிச் சொல்கிறோம் - என்பதில்தான் கதையின் வெற்றி இருக்கிறது என்பதை உணர்த்தும் கதை.

================================

                                                              

ஏற்கெனவே மகாபாரதம் புத்தகம் வகைவகையாக வீட்டில் இருக்கிறது. இதில் முழுமையாக இருக்குமா, அது சுவாரஸ்யமாகச் சொல்லுமா என்றே வாங்கி வைத்தவை. தற்போது லிஸ்ட்டில் புதிதாக ஒன்று.

பி ஆர் சோப்ராவின் மகாபாரதம் தொலைக்காட்சித் தொடரை 'துக்ளக்' வெங்கட் மிக அருமையாக தமிழாக்கம் செய்திருக்கிறாராம். வாங்கலாமா என்ற ஆவலை விலை மட்டுப் படுத்துகிறது. 1320 பக்கங்கள் கொண்ட புத்தகம் 850 ரூபாயாம்.

==============================

                                                     

சமீபத்தில் 'ஹோம் தியேட்டரில்' (ஹிஹி...) பார்த்த 'சமர்' திரைப்படமும் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படமும் கொஞ்சம் கவர்ந்தன. இரண்டுமே வித்தியாசமான கதையம்சம் கொண்டவை. ஐ பி எல் கூத்துகளைப் பார்க்கும்போது சமர் கதை நினைவுக்கு வந்தது!

================================

                                                        

விகடனில் சுகா எழுதிய 'மூங்கில் மூச்சு' முடிந்ததும் அதை ஈடுகட்ட வந்தது ராஜு முருகனின் 'வட்டியும் முதலும்'. இப்போது அது முடிந்ததும் ஆரம்பித்திருக்கும், மாரி செல்வராஜ் எழுதும் 'மறக்கவே நினைக்கிறேன்' படிக்கத் தோன்றவில்லை! 

விகடனில் 'இளையராஜா' என்ற தலைப்பில் வந்துள்ள கதை கவர்ந்தது.

விகடன் சினிமாச் செய்திகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

==============================  

                                                                       

கல்கி சிறுகதைப் போட்டியில் கலந்துகொள்ள இணைக்கவேண்டிய அந்தப் படிவம் எடுத்து வைத்திருக்கிறேன். பேப்பர், பேனா எல்லாம் தயார்! கதைதான் ஒன்றும் தோன்றவில்லை!

=================================

குமுதம் வாங்கி விட்டேன்.

                                                      
 
அந்தக் காலத்து முத்து காமிக்ஸ் சைசில் இருக்கிறது. ஆனாலும் பனிரண்டு ரூபாய். நான் வாங்கிய இதழில் இளையராஜா தொடர் இல்லை. வாலியும், துக்ளக் சோ வும் மட்டும். 

வாலி வழக்கம்போல வார்த்தை ஜாலம். 

சோ எம் ஜி ஆரின் ஈகைக் குணங்கள் குறித்து எழுதி இருக்கிறார். 17 வது வாரம் என்கிறது தொடர். மிச்ச 16 இதழ்களுக்கு எங்கே போக!                

ஞாயிறு, 26 மே, 2013

ஞாயிறு 203:: என்ன பொடி?

   
சென்ற மார்ச் இருபத்தேழாம் தேதி. (2013). 
    
காலை மணி நாலரை. 
    
சென்னை பூங்கா இரயில் நிலையம். 
    
இரண்டாவது பிளாட்ஃபார்ம். 
     
(குரோம்பேட்டை செல்ல) இரயிலுக்காகக் காத்திருந்த போது, இரயில் நிலைய சிற்றுண்டி சாலையில், ஒருவர், பாக்கு இடிக்கும் சிறிய கல் உரல் ஒன்றில் எதையோ பொடி செய்து கொண்டிருந்தார். அது என்ன என்று ஆராய அருகில் சென்றேன். கண்டுபிடிக்க முடியவில்லை. அவரிடமே, அது என்ன என்று கேட்க நினைத்த மறுகணம், அவரை காபி, டீ விற்பவர் கூப்பிட, அவர் அவசரமாக அங்கே சென்று விட்டார்! 
    
அதற்குள் நான் செல்லவேண்டிய இரயிலும் வந்துவிட்டது. 
     
வேறு வழியில்லாமல், இந்த மர்மத்தை படம் எடுத்துக்கொண்டு, ஓடிச் சென்று வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். 
             
எதை பொடி செய்திருப்பார்? 
             
கற்பனைக் குதிரை ஓட்டுபவர்கள் ஓட்டுங்கள். கருத்துரை பதியுங்கள்! 
   
        

சனி, 25 மே, 2013

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - T M S - அஞ்சலி


TMS

                                  





தமிழக மக்கள் மறக்க முடியாத மூன்றெழுத்து. 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' என்று பாடியவர் தன மூச்சை நிறுத்திக் கொண்டார் இன்று.




தலைமுறைகளைத் தாண்டி ரசிகர்களைப் பெற்றிருப்பவர். அவர் பாடிய பாடல்களை ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற பாடல்களை பட்டியலிட முடியுமா? அவர் குரலிலேயே சொல்ல வேண்டுமென்றால் 'ஒன்றா, இரண்டா,  சொல்ல?'




தமிழ்நாட்டில் இருப்போருக்கு சிவாஜி, எம் ஜி ஆர், போன்றே மிகப் பழக்கமான மூன்றெழுத்து TMS.



 

நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் சிரஞ்சீவியாய் உலகெங்கும் உள்ள தமிழர் இல்லங்களில், மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

எங்கள் துன்ப வேளைகளையும் உங்கள் குரலால் இன்ப நேரமாக மாற்றிய பெருமானே... உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் பிரார்த்தனைகள்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = =
 

- துகுளுவா மீனாட்சி ஐயங்கார் சௌந்தர்ராஜன்.

- மார்ச் 24, 1922. புரோகிதக் குடும்பம். இரண்டாவது மகன். சின்னக்கொண்ட சாரங்கபாணி பாகவதரிடம் முதலில் சங்கீதப் பாடம். பின்னர் அரியக்குடியிடம் சிட்சை.

- 21 வயதில் கச்சேரி. MKT பாகவதர் குரலை இமிடேட் செய்வது வழக்கம். குரல் உடையவில்லை என்று வாய்ப்பு மறுக்கப் பட்ட டி எம் எஸ் சுந்தர்லால் நட்கர்னி வீட்டில் வேலைக்குச் சேர்ந்து எஸ் எம் சுப்பையா நாயுடுவிடம் அறிமுகப் படுத்தப்பட்டு, 1946 இல் நரசிம்ம பாரதி நடித்த கிருஷ்ண விஜயம் படத்தில் ராதே உனக்குக் கோபம் உள்ளிட்ட 5 பாடல்கள் பாட வாய்ப்பளிக்கப் பட்டார்.

- மறுபடி எம் கே டி குரல்தான்! படம் என்னவோ 50 இல்தான் வெளிவந்தது. அப்புறம் எத்தனையோ சிறு பாடல்கள், பக்திப் பாடல்கள் பாடியிருந்தாலும் தூக்குத் தூக்கியில் சந்தேக (பொருந்துமா) சிவாஜியுடன் பேசிக் குரலை ஸ்டடி செய்து அவர் பாடிய 'சுந்தரி சவுந்தரி' 'ஏறாத மலைதனிலே' பாடல்கள் சூப்பர் ஹிட்டாக, அவர் தேடிக் கொண்டிருந்த புகழ் அவரை வந்தடைந்தது. கூண்டுக்கிளியில் 


- சிவாஜிக்காக அவர் பாடிய பாடலைக் கேட்டு மயங்கிப் போன எம் ஜி ஆர் அவரைத் தன்னுடைய ஆஸ்தானப் பாடகராக்கிக் கொண்டு, முதலில் மலைக்கள்ளனில் 'எத்தனை காலம்தான்' பாட வாய்ப்பளித்தார்.

- குமுதம் படத்தில் எம் ஆர் ராதா குரலை இமிடேட் செய்து அவர் பாடிய'சரக்கு இருந்தா அவுத்து விடு' அவர் திறமைக்கு ஒரு உதாரணம். அப்புறம் அவர் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இரு பெரும் ஜாம்பவான்களின் ஆஸ்தான பாடகராகிப் போனார்.

- 1950 தொடங்கி 1990 வரையிலும் கூட தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னர் அவர். எஸ் எம் சுப்பையா நாயுடு, எஸ் வி வெங்கட்டராமன் தொடங்கி ஏ ஆர் ரஹ்மான் வரை அனைவரின் - 52 பேர் - இசையமைப்பிலும் பாடியுள்ளார். கூடுதலாக ஓ பி நையார். நௌஷாத் இசையமைப்பிலும் பாடியுள்ளார்.

- பி சுசீலா, எஸ் ஜானகி போன்றவர்களோடு கூட எம் எஸ் சுப்புலட்சுமி டி கே பட்டம்மாள் எம் எல் வசந்தகுமாரி ஆகியோருடனும் இணைந்து பாடியுள்ளார். 2003 இல் பத்மஸ்ரீ விருது. அவர் பாடிய 'மண்ணானாலும் திருச்செந்தூரில்' பாடல்தான் தென் இந்தியாவின் முதல் ஸ்டீரியோ ரெகார்டிங். ராஜீவ் காந்தியின் முதல் வருட மறைவை ஒட்டி இவர் பாடிய 'உள்ளம் உருகுதையா' கேட்டு சோனியா மிக உணர்ச்சி வசப்பட்டு விட்டாராம்.

- கிட்டத்தட்ட எல்லா இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார். 10,000 த்துக்கும் அதிகமான திரையிசைப் பாடல்கள், 2500க்கும் அதிகமான பக்திப் பாடல்கள், கிட்டத்தட்ட 1991 இல் 'ஞானப்பறவையில் அவர் பாடியதுதான் அவர் குரலில் ரசிகர்கள் கடைசியாகக் கேட்ட திரைப் பாடல். 2007 இல் அவர் குரலில் ஒரு பாடல் பதிவு செய்ததாக அறியப்பட்டாலும் அது வெளியாகவில்லை.

அவர் சம்பந்தப்பட்ட செய்திகளைப் படிக்க இங்கு செல்லலாம்.

பாசிட்டிவ் செய்திகள் மே 18, 2013 முதல் மே 25, 2013 வரை


எங்கள் B+ செய்திகள்.  
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....  
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =    
    
1) அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாகும் இந்தியர்  
             
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் சீனிவாசன், அமெரிக்க நீதி மன்றத்தின் நீதிபதியாகிறார். ஸ்ரீகாந்த் சீனிவாசன் சண்டிகாரில் பிறந்தவர். அமெரிக்காவில் அவர் கட்சி பாகுபாடின்றி ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர் ஆவார். 
     

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பிரபல வக்கீல் ஸ்ரீகாந்த் சீனிவாசன் (46). தற்போது இவர் அரசின் துணை சொலிசிடர் ஜெனரலாக பதவி வகித்து வருகிறார். 

                  
இவரை கொலம்பியா Circuit Court நீதிபதியாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நியமனம் செய்து உத்தரவிட்டார். காலியாக இருக்கும் 4 நீதிபதி பணியிடங்களில் ஒரு நீதிபதியாக அவர் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
                    
இந்நிலையில் ஸ்ரீகாந்த் சீனிவாசனின் நியமனத்துக்கு 18 உறுப்பினர்கள் கொண்ட செனட்சபை நீதித்துறை கமிட்டி சென்ற வாரம் ஒப்புதல் அளித்தது. இதுபற்றி கமிட்டி தலைவர் செனட்டர் பாட்ரிக் லீசேய் கூறும்போது, ‘இரு கட்சி சேர்ந்த பிரதிநிதிகளும் ஆய்வு செய்து இந்த நியமனத்துக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தோம்’ என்று குறிப்பிட்டார். 

              
           
இதனை அடுத்து கொலம்பியா Circuit Court நீதிபதியாக ஸ்ரீகாந்த் சீனிவாசன் பதவி ஏற்கிறார். இது அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டுகளுக்கு அடுத்த 2-வது பெரிய கோர்ட்டு ஆகும்.   

               

இதன் மூலம் அமெரிக்காவிலுள்ள உயர் கோர்ட்டுக்கு நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவையாகும். இந்த பெருமை ஸ்ரீகாந்த் சீனிவாசனுக்கு கிடைத்திருக் கிறது.
                    
ஒரு இந்தியனுக்கு அமெரிக்காவில் கிடைத்த மிகப்பெரிய பதவிக்கும் மரியாதைக்கும் நன்றி தெரிவிப்போம்.. நீதிபதியை பாராட்டுவோம்! (முகநூல்)

                       
2)  சக்கர நாற்காலியில் பத்து வயது சிறுவனை போல, உடல் சூம்பிய நிலையில் காணப்பட்ட அவருக்கு, கழுத்துக்கு கீழே உள்ள பாகங்களில் கைவிரல்களில் மட்டுமே அசைவு உண்டு, அதுவும் லேசாக.
                   
அந்த லேசான அசைவுகளையும், தனக்குள்ளான ஆர்வத்தையும், கம்ப்யூட்டர் அறிவையும் வைத்துக் கொண்டு இன்றைக்கு உலகம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நண்பர்களை பெற்றுள்ளார்.
ட்வீட்டரும், பேஸ்புக்கும், பிளாக்கிலும் புழங்குகிறவர்களுக்கு "ஜகூ' என்ற வார்த்தை பிரபலம், "ஜகூ' என்ற வார்தைக்கு பின் இருப்பவர்தான் இந்த கட்டுரையின் நாயகன் கோவை ஜெகதீஷ்.
               
எல்லோரும்தான் எழுதுகிறார்கள் ஆனால் ஜெகதீஷின் தனித்துவம் அவரது எழுத்தில் இருக்கிறது.
                
வெட்டி அரட்டை எல்லாம் இல்லை, எந்த ஓரு விஷயத்தையும் தீர்க்கமாகவும், தீவீரமாகவும் விமர்சிக்கிறார்.

இந்திய பொருளை வாங்கு இந்தியனாக இரு என்பதை தீவிரமாக சொல்கிறார்.  
            
தமிழின் மீதான அதீதமான காதலால் நள்ளிரவு நேரம் என்றால் கூட தயங்காது வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு "ஆன் லைனில்' தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்.
               
கோவையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்கள் அபிமானத்தையும் பெற்றவர்.அன்று முதல் இன்று வரை மாணவர் கூட்டமைப்பின் அறிவிக்கப்படாத ஆலோசகராக இருந்துவருகிறார்.
                        
தமிழ் சினிமாவின் தன்மையையே மாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் அதற்கான நண்பர்களுடன் திரைக்கதை பற்றிய ஆலோசனை ஒரு பக்கம், அரசியல் சாக்கடை என்றால் அதில் இறங்கித்தான் சுத்தம் செய்யவேண்டும் நான் இறங்கத்தயார் அதுவும் உத்தமமான மாணவர் அமைப்போடு என்று அதற்கான தளத்தில் ஒடுவது ஒரு பக்கம், இன்றைய உலகம் இளைஞர்கள் கையில், ஆனால் இளைஞர்கள் கையிலோ கம்ப்யூட்டர், ஐபேடு, ஸ்மார்ட் போன் என்று சுழலுகிறது, நாம் அதற்குள் நுழைந்து தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதற்கான உழைப்போடும், உலகோடும் ஒரு பக்கம், நான் கப்பல் என்ஜீனியர் எனக்கான புராஜக்டை என்னால் முடிக்க முடியவில்லை நீங்கள் உதவமுடியுமா?என்று கேட்ட என்ஜீனியருக்கு ஓ...தாரளமாக என்று முடித்துக்கொடுத்த அறிவு ஜீவிதம் ஓரு பக்கம் என்று மனதால் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதவில்லை என்று ஒடிக்கொண்டிருக்கும் ஜெகதீஷ், உண்மையில் இதை எல்லாம் இயலாமை காரணமாக படுத்த படுக்கையில் இருந்தபடிதான் செய்கிறார், செயல்படுகிறார் என்றால் நம்பமுடிகிறதா
   
ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும்.
    
வலியும்,வேதனையும் நிறைந்ததுதான் இவரது வாழ்க்கை,
வெங்கட்ரமணன், கிரிஜா தம்பதியினரின் ஒரே மகனான ஜெகதீஷ் பிறந்த போது அவனை தூக்கிக் கொஞ்சாதவர்களே இல்லை அத்தனை அழகு, ஆனால் கண்பட்டது போல நடக்க வேண்டிய வயதில் ஜெகதீஷால் நிற்கவே முடியாமல் போனது.
    
மூன்று வயதில் உயரத்தில் இருந்து குழந்தைகள் விளையாட்டாக தள்ளியதில் முகத்தின் பற்கள் சேதமடைந்தது, ஏழு வயதில் நிற்கவைப்பதற்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தவறாக முடிந்ததில் உட்காரவும் முடியாமல் போனது, மின்சார சிகிச்சை என்ற பெயரில் செய்யப்பட்டது எல்லாம் உயிரை விட்டுவிட்டு உதிரத்தை உறிஞ்சியதில் உடம்பு பாழானது, இப்படி ஆளாளுக்கு செய்த சிகிச்சையால் பசிபோனது, சேமித்த பணம் போனது கடைசியில் பத்தாம் வகுப்போடு படிப்பும் போனது...
      
தந்தை தனது தொழிலைவிட்டுவிட்டு மகனுக்கு நாள் முழுவதும் தொண்டு செய்யும் தாயுமானவராயிருக்கிறார், ஜெகதீஷ்க்கு உதவுவதற்காக கோவை இந்துஸ்தான் ஹார்டுவேர் நிறுவனம், அந்தக்கால பிகாம் படிப்பாளியான ஜெகதீஷின் தாயாருக்கு அக்கவுண்டன்ட் வேலை கொடுத்து ஜெகதீஷின் குடும்பம் பசி, தாகம் அறியாது காத்து வருகிறது.
     
இந்த நிலையில் ஜெகதீஷ் தனது ஒரே துணையாக இருந்த மொபைல் போனில் தனது தேடுதலை ஆரம்பித்தவர், நான்கு வருடங்களில் லேப்-டாப், இண்டர்நெட் உதவியுடன் உதவியுடன், மெத்த படித்த கம்ப்யூட்டர் அறிவாளிகளுக்கே கற்றுக்கொடுக்குமளவு அதில் தனது அறிவை பெருக்கிக் கொண்டுள்ளார். கம்ப்யூட்டர் அல்லாத பிற துறைகளிலும் தனது அறிவை வளர்த்துக்கொண்டு வருகிறார்.
       
யாராவது பார்க்க வருகிறார்கள் என்றால் சிறிது நேரம் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்து இருப்பார், எங்காவது போவது என்றால் பாட்டி சுப்புலட்சுமி துணையோடு அந்த நாற்காலியில் போய்வருவார், மற்றபடி படுக்கையில் படுத்துக்கொண்டு காதில் இயர் போனை செருகிக்கொண்டு இடது கையின் நடுவிரலை அசைத்து,அசைத்தே, நம்மில் பலராலும் முடியாத பலவித வேலைகளை கம்ப்யூட்டரில் செய்கிறார், இல்லையில்லை செதுக்குகிறார்.
             
இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார், இதைவிட மேலானாது, தான் கற்றதையும், பெற்றதையும் அனைவருக்கும் சொல்லிக்கொடுக்க விரும்புகிறார். தனக்கு அறிவு புகட்டி ஆளாக்கிய கோவை அம்ருத் சிறப்பு பள்ளிக்கு பெருமை சேர்க்க எண்ணுகிறார், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இவரது தலையில் கைவைத்து நீ மாற்றுத்திறனாளியல்ல, பலரை மாற்றும் திறனாளி என்று சொல்லி ஆசீர்வதித்ததை நிஜமாக்க விரும்புகிறார்.
                
இவரிடம் கம்ப்யூட்டர் திறமை நிறைய இருக்கிறது, தமிழில் வளமையான அறிவு இருக்கிறது, எதற்காகவும் நியாயத்தை விட்டுக் கொடுக்காத கம்பீரமும் இருக்கிறது, எந்த சூழ்நிலையிலும் நேர்மையை கைவிடாத மனத்துணிவு இருக்கிறது.
    
இல்லாதது, நிரந்தர வருமானம். என்னைப்பெற்ற அவர்களது மனதிலும்,கண்ணிலும் மகிழ்ச்சியை பார்க்க விரும்புகிறேன்,அதற்காக உழைத்து சம்பாதிக்க விரும்புகிறேன், இனியும் இவன் சுமை அல்ல, சுகமானவனே என என்னைச் சார்ந்தவர்களை அனைவரும் எண்ணும்படி மாறவேண்டும், அதற்கு உழைக்க தயராக இருக்கிறேன். ஆனால் என் தகுதி அறிந்து வேலை தருபவர் யாரும் உண்டா? என்பதை தினமலர் இணையதளம் மூலம் அறிய விரும்புகிறேன்.    
        
வறுமையும், திறமையும் ஒன்றாகத்தான் இருக்கவேண்டுமா வாசகர்களே
உங்களது தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலையை,தொழிலை தர எங்கள் வாசகர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள், அவர்கள் உங்கள் எண்ணில் தொடர்பு (9791497906) கொள்வார்கள் என்ற நம்பிக்கையை அவருள் விதைத்துவிட்டு விடைபெற்றேன்.
    
(வேலை தருவதற்காக இல்லாவிட்டாலும் பராவாயில்லை இவருடன் நேரம் கிடைக்கும் போது பேசிப்பாருங்கள், கொங்கு மண்ணின் மரியாதை என்றால் என்ன என்பது தெரியவரும், இவரது ஆளுமை புரியவரும்.)  
    
விடைபெறும் போது பாசமும், அன்பும் இழையோட ஜெகதீஷிடம் இருந்து குரல் வந்தது

"நன்றி!அண்ணா''! (தினமலரில் எல் முருகராஜின் கட்டுரைச் செய்தி.)

3) இந்த நேரத்தில் இந்த பாசிட்டிவ் செய்தி :

20 லிட்டர் மினரல் வாட்டரை, வெறும், 7 ரூபாய்க்கு விற்பனை செய்யும், வாட்டர் லைப் நிறுவனத்தின், மனோகர்: புதுச்சேரியில், சுனாமிக்கு பிறகு, நிலத்தடி நீரின் தன்மையும், அதன் சுவையும் மாறியதால், தரம் மிகவும் குறைந்து விட்டது.

"போர்வெல்' மூலம் கிடைக்கும் நீரும், மனிதர்கள் குடிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை. எனவே, இக்குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, புதுச்சேரி அரசுடன் இணைந்து, நிலத்தடி நீரை சுத்திகரித்து, குறைந்த விலையில், "மினரல் வாட்டர்' வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தினோம்.

பொது மக்களுக்கு, பாதுகாப்பான குடிநீர் வழங்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன், புதுச்சேரி அரசு உதவியுடன், நீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைத்தோம். பொதுப்பணித் துறை உதவியால், போர்வெல்லில் இருந்து கிடைக்கும் தண்ணீரை, "ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்' எனும், எதிர் திசை சவ்வூடு பரவல் முறையில் சுத்தம் செய்வதால், குடிப்பதற்கு ஏற்ற, சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட, 20 லிட்டர் தண்ணீரை, வெறும், 7 ரூபாய்க்கே தருகிறோம்.
   
புதுச்சேரியை சுற்றி, மொத்தம், 19 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்துள்ளோம். ஒவ்வொரு நிலையத்திலும், நாள் ஒன்றுக்கு அதிகபட்சம், 24,000 லிட்டர் குடிநீரை சுத்திகரித்து, கேன் ஒன்றுக்கு, 20 லிட்டர் என்ற அளவில், 1,200 கேன்கள் வரை, பொது மக்கள் பெற முடியும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, இத்திட்டம் பெரும் உதவியாக உள்ளது.
   
விரைவில், கிராமப் பகுதியிலும், இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.வார நாட்களில், தினமும் காலை, 7:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரையும், பின், மாலை, 4:00 மணி முதல், 7:00 மணி வரை, பொது மக்கள் எங்களிடமிருந்து, தண்ணீரை பெற முடியும்.
     
ஞாயிற்று கிழமைகளில் மட்டும் பகல், 12:00 மணி வரை, தண்ணீர் பெறலாம். எங்கள் சேவை மற்றும் தரத்தில், ஏதேனும் குறை மற்றும் தகவல் தேவைப்பட்டால், 1800 420 9696 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால், உடனடியாக அக்குறையை சரிசெய்வதுடன், தேவையான தகவலும் தருகிறோம்.
    
4)  வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க, புத்தகங்களை இலவசமாக டோர் டெலிவரி செய்யும், சேதுராமன்: நான், சென்னை, அம்பத்தூரில் வசிக்கிறேன். இளம் தலைமுறையினரிடம், புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. ஓய்வு நேரத்தில், புத்தகங்கள் வாசிக்காமல், "டிவி' பார்ப்பது, கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதிலேயே, நேரங்களை செலவிடுவதால், தாய் மொழியான தமிழை கூட, மாணவர்கள் சிரமப்பட்டே படித்ததால், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க முயற்சித்தேன். இன்றைய சூழலில், பலருக்கு போதிய நேரம் இல்லாததால், நூலகத்திற்கு நேரடியாகச் சென்று படிக்க முடியாது.
      
குழந்தைகளுக்கு நல்ல புத்தகத்தை தேர்ந்தெடுத்துக் கொடுப்பதில், பெற்றோருக்கும் பல சிரமங்கள் உள்ளதை கண்டறிந்து, அவற்றை சரிசெய்ய எண்ணி, டி.சி.எஸ்., நிறுவனத்தில், 60 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பள வேலையை, ராஜினாமா செய்து, "பேன்யன் ட்ரீ' என்ற நூலகத்தை, நண்பர்கள் உதவியுடன், 2010ம் ஆண்டு, புழுதிவாக்கத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஆரம்பித்தேன். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்ப, புத்தகங்களின் விவரங்கள் பற்றிய குறிப்பை, "ரீடர்ஸ் கிளப்' என்ற, எங்களின் இணையதளத்தில் வெளியிட்டோம். வேலைச் சுமை காரணமாக, நூலகத்திற்கு நேரடியாக வர முடியாதவர்களுக்குத் தேவையான புத்தகத்தை, நாங்களே அவர்களின் வீடு தேடிச் சென்று இலவசமாக, "டோர் டெலிவரி' செய்கிறோம். தேவையான புத்தகத்தை, தொலைபேசி அல்லது இணையதளம் மூலம், எங்களுக்கு தகவல் தந்தால் மட்டும் போதும். லாப நோக்கத்தை தவிர்த்து, ஒரு சேவையாக, இந்நூலகத்தை நடத்தி வந்தாலும், புத்தகங்களின் விலை உயர்வு, புத்தகத்தை, "டோர் டெலிவரி' செய்வதற்கான, ஆட்களின் மாத ஊதியம் மற்றும் வாகனங்களுக் கான பெட்ரோல் விலை உயர்வு போன்ற பிரச்னைகளை சமாளிக்க, ஒரு நபருக்கு, மாத சந்தாவாக, 60 ரூபாய் வசூலிக்கிறேன். தற்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், எங்களிடம் சந்தாதாரர்களாக உள்ளனர். தொடர்புக்கு: 99621 00032.
                  
5) நடிகர் லாரன்ஸ் தீவிரமான ராகவேந்திரர் பக்தர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே... இவர் சென்னை அம்பத்தூரில் ராகவேந்திரருக்கு ஒரு கோவில் கட்டியுள்ளார். இக்கோவில் கட்டி நான்கு ஆண்டுகள் சமீபத்தில்  நிறைவடைகிறது. அன்றைய நாளிலேயே ராகவேந்திரரின் பிறந்தநாளும் வருகிறது.  
                                            

இதையொட்டி, ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கும் லாரன்ஸ், புதிதாக கட்டியுள்ள இலவச பள்ளிக்கூடத்தையும் திறந்து வைக்கிறாராம். இந்த பள்ளியின் மூலம் 100 மாணவர்களுக்கு இலவச கல்வி வசதி ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்துள்ளார்.  
                               
5)  இலவச வாகன உதவிகள்!  
 
மாற்றுத் திறனாளிகளுக்கான, இலவச மோட்டார் வாகனங்களை பெறும் முறைகளை விளக்கும், சூர்ய.நாகப்பன்: 
    

நான், "காலிப்பர்' என்ற, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆலோசனை மையத்தை, கோவையில் நடத்தி வருகிறேன். மாற்றுத் திறனாளிகள், தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களுக்கு எளிதில் சென்று வர, அரசு உதவியுடன், இலவசமாகவே, மூன்று சக்கர மோட்டார் வாகனங்களை பெறலாம். 18 வயது பூர்த்தியடைந்த, மேற்கல்வி பயில்வோர், சுயதொழில் செய்பவர் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை உண்டு. 
    
தாங்கள் பயிலும், கல்லூரி அல்லது கல்வி நிறுவன முதல்வரிடமிருந்து அத்தாட்சியும், மாற்றுத் திறனாளி என்பதற்கான, தேசிய அடையாள அட்டையின் நகலையும் இணைத்து, தாங்கள் வசிக்கும் மாவட்டத்தின், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலருக்கு, உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நல அலுவலர், விண்ணப்பதாரரை நேரடியாக அழைத்து, சான்றிதழ்களின் உண்மை தன்மையை விசாரித்து, மருத்துவ பரிசோதனை செய்வர். அதன் முடிவுக்கு ஏற்ப, உடற் குறைபாட்டை பொறுத்து, முன்னுரிமை கிடைக்கும். ஆனால், மூன்று சக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் அளவிற்கு, கரங்கள் வலு உள்ளதாக இருப்பது அவசியம். 
                 
ஒவ்வொரு ஆண்டும், மாநில அளவில் தேர்வு செய்யப்படும், 1,000 பயனாளிகளுக்கு, சுதந்திர தினம், குடியரசு தினம், மாற்றுத் திறனாளிகள் சர்வதேச தினமான, டிச., 3ம் தேதி, ஆகிய நாட்களில், மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள், இலவசமாக வழங்கப்படும். அலுவலர் பரிசீலித்த பின்னும், வாகனம் வழங்க தாமதித்தால், மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், முதல்வரின் தனி பிரிவுக்கும், மனு அளிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பித்து, எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெறலாம். ராஜிவ் காந்தி மெமோரியல் டிரஸ்ட், கார்ப்பரேட் நிறுவனங்கள், லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம் போன்ற தனியார் அமைப்புகளும், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மோட்டார் வாகனங்களை வழங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன.    
 
7) ஏப்ரல் 12, 2011: உத்திரப்பிரதேசத்தின் பரைலி நகரிலிருந்து தில்லி வரும் பத்மாவதி எக்ஸ்பிரஸ். குண்டர்கள் சிலர் தங்கச் சங்கிலிகளைப் பறிக்கும் முயற்சியில் இருக்க அவர்களை எதிர்த்துப் போராடினார் அருணிமா சின்ஹா. கோபம் கொண்ட அந்தக் கயவர்கள் ஓடும் ரயிலிருந்து அருணிமாவைக் கீழே தள்ளிவிட எதிர் பக்கத்திலிருந்து வந்த மற்றொரு ரயிலில் அவரின் கால், இடுப்பு மற்றும் முதுகெலும்பில் பயங்கர அடிபட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருணிமாவின் உயிரைக் காப்பாற்ற அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது.
   
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் இருக்கும் ஒரு சிகரம் சாம்சேர் காங்க்ரி. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 21710 அடி. கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி அருணிமா சின்ஹா என்ற பெண்ணும் மற்றும் மூன்று பேர் கொண்ட குழுவினரும் இச்சிகரத்தின் 21110 அடி வரை சென்றிருக்கிறார்கள். இன்னும் 600 அடி சென்றால் சிகரத்தினைத் தொட்டிருக்க முடியும் – ஆனால் இடைவிடாத பனிப்பொழிவும் மழையும், போதிய வெளிச்சம் இல்லாமையாலும் அவர்களால் இன்னும் 600 அடி ஏறி சிகரத்தினைத் தொடமுடியவில்லையாம். தன்னம்பிகையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்நிலையிலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்த அருணிமா சின்ஹாவிற்கு ஒரு பூங்கொத்து!
   
பச்சேந்த்ரி பால் அவர்களிடம் மலையேற்றத்திற்கான பயிற்சி பெற்ற இந்த தன்னம்பிக்கை மனுஷி, சென்ற 21 ஆம் தேதி காலை 10.55 மணிக்கு உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தினைத் தொட்டிருக்கிறார். தனக்குக் கால் இல்லையென எல்லோரும் பரிதாபமாய் பார்ப்பதைத் தவிர்க்க ஏதாவது செய்தே தீரவேண்டும் என நினைத்து விடாமுயற்சியுடன் பல இன்னல்களைக் கடந்து சிகரம் தொட்ட இந்தப் பெண்மணிக்கு மனதார வாழ்த்துகளைத் தெரிவிப்போம். (வெங்கட் நாகராஜ் பக்கத்திலிருந்து)
       

வெள்ளி, 24 மே, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130524


காட்சி ஒன்று கானம் வேறு 

என் ராஜாவின் ரோஜா முகம்... 




என் நிலவு நீ... சூரியன் நீ...(சந்தா ஹை து...)


                     

புதன், 22 மே, 2013

சந்தோஷங்கள்


பழைய நினைவு ஒன்று. நானும் தாத்தாவும் அந்த ஹோட்டலுக்குள் நுழைகிறோம். என்னென்னவோ வாசனைகள் நாக்கின் சுவை நரம்பைத் தூண்டி எதிர்பார்ப்பைக் கிளப்புகின்றன.

தாத்தா ஆர்டர் கொடுக்கிறார். (என்னைக் கேட்காமலேயே)

                                            

"ரெண்டு பேருக்கும் ரெண்டு இட்லி, ஒரு தோசை"

என்னென்னவோ ஹோட்டலில் இருக்கும்போது இவர் ஆர்டர் செய்ய இதுதானா கிடைத்தது என்று நினைத்துக் கொள்கிறேன்.

அப்புறம் ஒருமுறை மாமாவுடன் ஹோட்டல் சென்றபோதும் இதே அனுபவம்.

என்னவோ அவர்களுக்கெல்லாம் ஹோட்டல் போனால் இதைத்தான்-இதை மட்டும்தான் சாப்பிட வேண்டும் - என்று எண்ணம் போலும்.

                   

பரோட்டா என்கிற வஸ்துவை அப்புறம்தான் பார்த்தேன், சந்தித்தேன்! அதை நாங்கள் அப்போது புரோட்டா என்று சொல்லுவோம். ஆமாம் இந்த பரோட்டா எத்தனை வருடங்களாகத் தமிழ் நாட்டில் அறிமுகம்? கூகிள் செய்து பார்க்க வேண்டும்!

தோசை, இட்லி, சேவை நாழி வைத்து கிரேசி தீவ்ஸ் படத்தில் வருவது போன்ற தொடர்ச்சியான மென்மையான, அழகான சேவை, உப்புமா வகையறாக்கள் சப்பாத்தி, குருமா என்று சகலமும் வீட்டிலேயே கிடைத்து வந்த நாளில் இவர்கள் எல்லாம் ஹோட்டலுக்குப் போயும் இதே இட்லி, தோசையைச் சாப்பிடுவது எரிச்சலாக இருந்தது. என்ன செய்ய? அதாவது கிடைக்கிறதே என்று சாப்பிடுவோம்.

                                              

ஆனால் இது மாதிரி ஹோட்டலுக்குப் போகும் அனுபவம் கூட வருடத்துக்கு ஒருமுறை கிடைக்கலாம், அவ்வளவுதான்! அப்புறம் ஹோட்டலுக்குப் போகும் ஆசை அதிகமானது. அப்பா தஞ்சையிலும் மதுரையிலும் ஆபீசிலிருந்து வரும் வழியில் கேண்டீனிலிருந்தும், மதுரையில் தலைமை தபால் அலுவலகம் அருகே இருந்த பரபரப்பான பஜ்ஜி, போண்டாக் கடையிலிருந்து பஜ்ஜி, போண்டா, வடை வகையறாக்கள் கடப்பா மற்றும் சட்னியுடன் வாங்கி வருவது தவிர ஹோட்டல் அனுபவம் எப்போதாவது வெளியூர் செல்லும் வாய்ப்பு இருக்கும் சமயங்களில் இருக்கலாம். அப்போதும் பெரும்பாலும் புளியோதரை தயிர்சாதம் அவற்றை அடித்து விடும்!

என் ஹோட்டல் ஆசை அத்தனையையும் அந்நாளில் நிறைவேற்றி வைத்தவர் என் நண்பர் சுகுமார். (பின்னாளில் அவர் எங்களுக்கு உறவுதான் என்றும் தெரிந்தது). மதுரையில் புகழ் பெற்ற டிவி சர்விஸ் நிபுணர். அப்போது டிவி எந்த அளவு கோலோச்சியது என்று சொல்லத் தேவையில்லை. பணம் கொட்டும். பணத்தை தனக்கென வைத்துக் கொள்ளத் தெரியாதவர். அடுத்தவர் சந்தோஷத்தைப் பார்த்து சந்தோஷப்படும் குணமுள்ளவர். வித விதமான, சின்ன பெரிய எல்லா ஹோட்டல்களுக்கும் அழைத்துச் சென்று, வித்தியாசமான ஐட்டங்களையும் அறிமுகப் படுத்துவார். மதுரையில் பூச்சி ஐயங்கார்க் கடை சீவல் தோசை, நாராயணா ஹோட்டல் வெள்ளை அப்பம், பஞ்சாபி ஹோட்டல், ஹேப்பி மேன் முந்திரி அல்வா, என்று  சின்னச் சின்ன சந்துகளில் இருக்கும் சுவைகளை எல்லாம் அறிமுகப் படுத்தியிருக்கிறார்.

எதிர்பாராத விஷயங்களை, எதிர்பாராத நேரங்களில் செய்து திகைக்க வைத்து விடுவார். எங்கள் உறவு வட்டத்திலும் இவர் பிரபலம்.

ஒருமுழம், இரண்டு முழம் பூ வாங்கும் இடத்தில் விற்பவரும், உடன் நிற்பவர்களும் அதிர்ச்சி அடையும் வகையில் அந்தக் கூடைப் பூவையும் வாங்கி விடுவார். அப்புறமென்ன? அந்தத் தெரு முழுதும் பூ விநியோகம்தான். பூ விற்கும் அந்தப் பையன் அப்புறம் இவர் என்ன வேலை சொல்வார், செய்யலாம் என்று காத்திருந்து முடித்துக் கொடுப்பான்!

ஒரு தாத்தா "புவனேஸ்வரி ஸ்நானப் பவுடர்,ஊது பத்தி " என்று குரல் கொடுத்தபடி ஊதுபத்தி, ஸ்நானப் பவுடர் போன்றவை விற்றுக் கொண்டு வருவார். அப்போது அவருக்கு 70 வயது இருக்கலாம். அவருடைய வயது காரணமாக, அவர் அலையக் கூடாது என்று நினைப்பின் காரணமாக இவர் அவரிடம் உள்ள ஸ்டாக்கில் 80 சதவிகிதம் வாங்கி விடுவார். அவருக்கு தண்ணீர், காபி என்று உபசரணைகள் செய்து அனுப்புவார். வியாபாரத்துக்கு வரும் போதெல்லாம் இவரும் அவரும் பல விஷயங்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். எங்கள் வீட்டு மோதி அவர் கொடுத்ததுதான். கண் திறந்த உடனேயே எங்கள் வீட்டுக்கு வந்து விட்டாலும் அவரை அது தூரத்தில் வரும்போதே அடையாளம் காணும் அழகு இருக்கிறதே....

நன்றாகச் சமைப்பார். ஒரு பொழுது போகாத ஞாயிற்றுக் கிழமையில் 'திரட்டுப் பால் செய்யத் தெரியுமா' என்று கேட்டவுடன், அங்கு இருந்த 'ஆவின் பூத்'தில் மீதம் இருந்த பால் பாட்டில் (அப்போதெல்லாம் அரை லிட்டர் பாட்டிலில்தான் பால். அதற்கும் முன்பு பெரிய கேனில் கொண்டு வந்து விநியோகம் செய்வார்கள்!) அத்தனையையும் வாங்கி, தெரு மணக்க, திரட்டுப் பால் செய்து விநியோகம் செய்தார்! இவர் செய்யும் புளிக்காய்ச்சல் போல நான் வேறெங்கும் சாப்பிட்டதில்லை. ஒருமுறை எங்கள் அலுவலக விழா ஒன்றுக்கு இவர் செய்து கொடுத்த கல்கண்டு சாதமும், வெஜிடேபிள் சாதமும் எல்லோரையும் கவர்ந்தன.

                                                                                                                  

சினிமாக்களை முதல் நாள் பார்க்க வைத்தார். அவர் வைத்திருந்த வண்டியில் அமர்ந்து ஊர் முழுதும் சுற்றும் அனுபவம் தந்தார்.

இப்போதெல்லாம் ஹோட்டலுக்குப் போனால் (எப்போதாவதுதான் போகிறேன்!) நானும் தோசையைத்தான் தேடுகிறேன்.  ரவா தோசை!

                                    

இப்போது சுகுமார் என்னை ஆன்மீகத்துக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டிருக்கிறார். கேனோபநிஷத், முண்டகோபனிஷத் புத்தகங்கள் தந்து படிக்கச் சொல்கிறார். ராமகிருஷ்ண பரமஹம்சர் சரித்திரம் சொல்கிறார். மகா பெரியவரின் தீவிர, அதி தீவிர பக்தர். தெய்வத்தின் குரல் பலமுறை படித்திருக்கிறார் என்பதால் அதிலிருந்து பல விஷயங்கள் சொல்வார். அவருக்கு எதாவது சந்தேகம் வந்தால், பிரச்னை வந்தால் 'தெய்வத்தின் குரல்' எடுத்து எதாவது ஒரு பக்கத்தைப் பிரித்தால் தீர்வு கிடைத்து விடும் என்கிறார். சில சமயங்களில் அப்போது கேட்கும் நொச்சூர், வேளுக்குடி  கூட தீர்வு கிடைக்கிறது என்பார். பயங்கர ஆன்மீகர்.

சமீபத்தில்கூட திருப்பதி சென்று வந்த அனுபவம் பற்றிச் சொல்லி, அங்கு ஒருவர் கூண்டுகளில் காத்திருக்கும் நேரத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம் சத்தமாகச் சொல்ல ஆரம்பிக்க, இன்னொருவரும் கூடவே தொடங்கி விட்டு, ஸ்ரீ சுக்தம், புருஷ சுக்தம் எல்லாம் சொன்னாராம். கொஞ்ச நேரம் கழித்து இவர் அவரிடம் விஷ்ணுசகஸ்ரநாமம் பொதுவில் சொன்னது சரி, மற்றதெல்லாம் இப்படிப் பொதுவில் சொல்லக் கூடாது என்று எடுத்துரைத்ததைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

சும்மா இவரைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியபோது கிடைத்த தலைப்பு சந்தோஷம்தான்! ராமகிருஷ்ணர் பற்றி, பெரியவர் பற்றி என்று சளைக்காமல் மணிக் கணக்கில் பேசுவார். நான் 'உ..ம்' கொட்டுவதோடு சரி....!

நன்றி சுகுமார்.

செவ்வாய், 21 மே, 2013

துள்ளித் திரிந்ததொரு காலம்


குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்
கொடுக்காப்புளி புளியங்காய்
திருட்டு மாங்காய்ச் சுவையும்
குட்டிப் போடும் என்று காத்திருந்த
மயிலிறகும்

சீவிய பென்சில் துகள்களைப்
பாலில் ஊற வைத்து
ரப்பராகக் காத்திருந்ததும்
சாணி மிதித்த நண்பன்
தொட்டால் தீட்டு என
கொடுக்கு வைத்துக் கொண்டு
வெறுப்பேற்றிய நாட்களும்

பள்ளி விட்டு
நடந்து வந்த பாதையில்
நண்பன் கையில் கடிகாரம் கண்டு
நேரம் கேட்ட
கல்லூரி ஏந்திழைக்கு
வெட்க பதில் சொன்ன
நண்பனை
அதைச் சொல்லியே 
அழவைத்த நினைவுகளும்

சீரான இடைவெளியில்
வீட்டை விட்டு
ஓடிப் போய் விடும்
நண்பனும்
தற்கொலை செய்து கொள்ள
யோசனையும்,
'சாகும்வரை கூடப் படு'
என்று துணையும்,
கேட்ட நண்பனுக்குத் 'துணை'
ஏற்பாடு செய்த நினைவுகளும்

நூலகத்தில் 'அவள்'
எந்தப் புத்தகம் கையில் எடுத்தாலும்,
'நீங்க படிச்சுட்டு எனக்கு'
என்று அருகிலேயே
பார்வையால் வருடிக்
காத்திருந்த நாட்களும்,
காலனி சினிமாவில்
கன்னியவள் அருகிலேயே
இடம்பிடிக்க ஓடி
நண்பர்களின் கிண்டல்,
விரோதம் தேடிய நாட்களும்,

பள்ளிப்பணம் கட்ட வழியின்றி
மாதா கோவில் பின்புறம்
பாடி இருந்த நாட்களும்,
காய்கறி அடுப்புக்கரி
வாங்குவதில்
கமிஷனும்
குச்சி ஐஸ் பால் ஐஸ் வாங்கிக்
கையொழுக நக்கியதும்.........



துள்ளித் திரிந்ததொரு காலம்....


***************************************************

 நினைப்பாயா அம்மா...

கடுத்த தோசையும்
கசப்புக் காஃபியும்
எப்போது சுவைத்தாலும்
வந்து விடுகிறது
அம்மாவின் நினைவு...

சொர்க்கத்தில்
அடை அவியலும் தவலை வடையும்
கிடைத்தால்
அம்மாவும் நினைக்கக் கூடும்
என்னை...

ஞாயிறு, 19 மே, 2013

ஞாயிறு 202 :: காலையில் குடிப்பது என்ன?

           
         
வண்ணத்துப் பூச்சி! 
    
வாழ்வது என்னவோ இரு வாரங்கள்! 
ஆனால் 
தாழ்வது இல்லை, 
தலை கனத்து அலைவதில்லை!  
   

வாழும் நாளெல்லாம் 
வண்ணமலர்க் காட்டில் 
மலரோடு மலராய்,
மணம் பரப்பி! 
               
தேர்தல் நாளிலும் 
தேவை நேரத்திலும் 
மாறுதல் வேண்டியும் 
மனிதருக்கு மது விலக்கு!
   
எந்த நாட்டிலும் 
எந்த நாளிலும், 
எந்த நேரத்திலும் 
இல்லை அது உனக்கு! 
      

வெள்ளி, 17 மே, 2013

பாசிட்டிவ் செய்திகள் மே 12, 2013 முதல் மே 17, 2013 வரை.

     
எங்கள் B+ செய்திகள்.  

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   


- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   


- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள். 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =  
1)  வீடு தேடி வரும் பல் டாக்டர் வித்யா!  

பழைய திரைப் படங்களில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் அருகில் இருக்கும் டாக்டரை நோயாளி இருக்கும் வீட்டுக்கே அழைத்து வந்து,சிகிச்சை அளிப்பதைப் பார்த்துள்ளோம். இப்போது அதெல்லாம் மலையேறிய வழக்கமாகி விட்டது.தற்போது பெரும்பாலான மருத்துவர்களும் வசூல் ராஜாக்களாக, ராணிக்களாக மாறிக் கொண்டிருக்கிற காலம். மருத்துவத்தை சேவையாகப் பார்த்த மனோபாவம் மாறி, இன்று அது மாபெரும் பிசினஸ்!
    
தேவையற்ற பரிசோதனைகள், அனாவசிய மருந்துகள், அவசியமே இல்லாத கன்சல்ட்டேஷன் என மக்களின் பணத்தைப் பறிப்பதிலேயே பல மருத்துவர்களும் குறியாக இருக்க, சென்னை முகப்பேர் டாக்டர் வித்யா, விதிவிலக்காக நிற்கிறார். பல் மருத்துவரான வித்யாவின் வித்தியாசமான அணுகுமுறை வியக்க வைக்கிறது. வயதான மற்றும் உடல் நலம் இல்லாதவர்களின் பல் மருத்துவத்துக்காக அவர்களது இருப்பிடத்துக்கே போய் சிகிச்சை செய்து வருகிறார் வித்யா!
  
மருந்து, மாத்திரைகள், உபகரணங்கள் அடங்கிய சின்னப் பெட்டி, வெள்ளை கோட், கழுத்தைச் சுற்றிய ஸ்டெத்தஸ்கோப் என வித்யாவின் தோற்றம், பழைய கருப்பு-வெள்ளை சினிமாக்களில் வரும் மருத்துவ முகங்களை ஞாபகப்படுத்துகின்றன. டாக்டருக்கான எந்த அலட்டலும் இல்லாமல், தனது டூ வீலரிலோ, தேவைப்பட்டால் மட்டுமே காரிலோ, சிகிச்சைக்காக சென்னையை வலம் வருகிறார் வித்யா.  
   
"நர்ஸா இருந்த எங்கம்மா கலிங்கராணிதான் எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன். மருத்துவத்தை சேவையா பார்க்கக் கத்துக் கொடுத்தவங்க அவங்கதான். விருப்பப்பட்டுதான் பல் மருத்துவம் படிச்சேன்.

என்னைப் பொறுத்தவரை அது ஒரு கலை. ரொம்ப ரொம்ப கவனமா, அக்கறையா, அன்போட அணுக வேண்டிய ஒரு துறை. பல் மருத்துவம்கிறது இன்னிக்கு மிகப்பெரிய பிசினஸா வளர்ந்திட்டிருக்கு.
ஆஸ்பத்திரியோட பிரமாண்டம், அங்கே உபயோகிக்கப்படற பெரிய பெரிய மெஷின், வைத்திய செலவுன்னு எல்லாமே மக்களை பயமுறுத்துது. அதுக்குப் பயந்து, பல் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தறவங்களும்,சுய மருத்துவம் செய்துக்கிறவங்களும்தான் நிறைய பேர்…  பணம் பிரச்னையில்லைங்கிற நம்பிக்கையைக் கொடுக்கத்தான், ரொம்ப ரொம்ப குறைஞ்ச கட்டணத்துல சிகிச்சை கொடுக்க, 10 வருஷங்களுக்கு முன்னாடி கிளினிக் தொடங்கினேன்.

என்னோட கிளினிக்ல ஏழை, பணக்காரங்கன்னு எல்லோருக்கும் ஒரே மாதிரியான ட்ரீட்மெண்ட்தான். ஒரு முறை இலங்கையைச் சேர்ந்த பேஷண்ட், தன்னோட மாமியாரைப் பத்திச் சொன்னாங்க. படுத்த படுக்கையா இருந்த அவங்களுக்கு, பல் எல்லாம் விழுந்திருந்தது. பல் இல்லாததால சரியா சாப்பிட முடியலை. ரொம்ப பலவீனமா இருந்தாங்க. நோயாளிங்கிறதால ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் பல் செட் கட்டவும் முடியாத நிலையில, ‘அவங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா’ன்னு கேட்டாங்க.

அவங்க வீட்டுக்குப் போய், அந்தம்மாவுக்கு பல் செட் கட்டறதுக்கான 5 கட்ட சிகிச்சைகளையும் வீட்லயே செய்து, நல்லபடியா கட்டி விட்டேன். அதுக்குப் பிறகு அவங்க நல்லா சாப்பிட ஆரம்பிச்சு, உடம்பும் மனசும் தேறினாங்க. அந்த வாழ்த்தும் அதுல கிடைச்ச மன திருப்தியும்தான் என்னோட ‘மொபைல் கிளினிக்’ ஐடியாவுக்கு அஸ்திவாரம்…”  என்று பின்னணி சொல்கிற டாக்டர் வித்யா, ரொம்பவும் வயதானவர்கள், நடமாடவே முடியாத நோயாளிகள், மனநலம் சரியில்லாதவர்கள் ஆகியோருக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை தருகிறார்.
    
மற்றவர்களுக்கு தனது கிளினிக்கில். வீட்டுக்குச் சென்று சிகிச்சையளிப்பதற்காக உபரிக் கட்டணமெல்லாம் வாங்குவதில்லை! பற்களை சுத்தம் செய்வது, எடுப்பது, கட்டுவது, கிளிப் போடுவது, வேர் சிகிச்சை உள்ளிட்ட 90 சதவிகித சிகிச்சைகளை வீட்டிலேயே செய்யலாம் என்கிறார் வித்யா. ‘‘பெரும்பாலும் நான் தனியாவே போயிடுவேன். கொஞ்சம் பெரிய ட்ரீட்மென்ட்டுன்னா மட்டும்தான் அசிஸ்டென்ட்ஸ் கூட்டிட்டுப் போவேன்.
                                      
வயசானவங்களுக்கும், மனநலம் சரியில்லாதவங்களுக்கும் ட்ரீட்மென்ட் கொடுக்கிறப்ப, அசாத்திய பொறுமை வேணும். தன்னையறியாம கடிச்சிடுவாங்க. வாந்தி எடுப்பாங்க. முரட்டுத்தனமா நடந்துப்பாங்க. மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது அதைவிடக் கஷ்டம். அத்தனை சுலபத்துல நம்மகிட்ட வரவே மாட்டாங்க.

முதல் ரெண்டு விசிட் சும்மா அவங்களோட பேசிப் பழகுவேன். கிஃப்ட் கொடுப்பேன். மூணாவது விசிட்லதான் ட்ரீட்மென்ட் ஆரம்பிப்பேன். சிகிச்சை முடியறபோது, அவங்கக்கிட்டருந்து கிடைக்கிற அந்த அன்பும் வாழ்த்தும், கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதது…’’ – அன்பொழுகப் பேசுகிற டாக்டருக்கு, குடிசைவாழ் மக்களிடம் பல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வைப் பிரபலப்படுத்துவதே அடுத்த திட்டமாம்! (நன்றி: கூகிள் ப்ளஸ்)
                                                 
2) 2012ல் நாசா நடத்திய போட்டியில் புற ஊதாக்கதிர்கள் பற்றி கட்டுரை சமர்ப்பித்து நெதர்லாந்து சென்று முதல் பரிசை தட்டிக்கொண்டு வந்துள்ளனர் நம் தமிழக மாணவிகளான துர்காவும், திவ்யாவும்....

                                           

இந்த மாணவிகளை கட்டுரைக்காக சந்தித்தபோது, "பல ஐரோப்பிய நாடுகள் வெளிச்சம் இல்லாமல் பனியிலேயே மூழ்கிக் கிடக்கின்றன. மற்ற நாடுகளில் இல்லாத சூரியஒளி என்ற அற்புதம் நம்ம நாட்டுல அதிகமாவே இருக்கு...

மின்சாரப் பற்றாக்குறை என்று குறைகூறும் நம் ஆட்சியாளர்கள் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரித்தால் என்ன என்று முற்போக்குத்தனமான தங்கள் கருத்தை கூறினர் இந்த மாணவிகள்...

3) சாதிக்க பணம் தடையாக இருப்பதில்லை என்ற அனுபவ மொழிக்கு இலக்கணமாக விளங்குகிறார் 14 வயது நிரம்பிய மகாலட்சுமி. கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இவர், இந்த உயரத்தை அவ்வளவு சுலபத்தில் அடையவில்லை என்பதுதான் முக்கியம்.

‘‘பிறந்தது படிப்பது எல்லாம் சென்னையில்தான். அப்பா முகுந்த குமார் எலெட்ரிஷியன். உடன் பிறந்தவர்கள் மூன்று அக்காக்கள். நான்தான் கடைக்குட்டி. மூன்றாவது அக்காவுக்கு செஸ் விளையாட்டு மேல் ஆர்வம் இருந்தது. எனவே அவள் விளையாடும் போதெல்லாம் உடன் இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது எனக்கு வயது 5தான்.

‘இந்த விளையாட்டை நானும் கற்றுக் கொள்வேன்’ என்று அப்பாவிடம் சொன்ன போது மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். அக்கா கல்லூரியில் சேர்ந்தபோது, அவளால் போதுமான நேரத்தை விளையாட்டுக்காக ஒதுக்க முடியவில்லை. அதற்காக நானும் பின்வாங்கவில்லை. விடாமல் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அத்துடன் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும் பங்குபெற்று பரிசு வாங்க ஆரம்பித்தேன்.

இது தேசிய போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. 2005ம் ஆண்டு அவுரங்காபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சாம்பியன் போட்டியில் வெற்றியும் பெற்றேன். அடுத்த வருடமே ஆசிய போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தேன். அத்துடன் அதே வருடம், ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றேன்.

இங்கும் எனக்கு மூன்றாவது இடம் கிடைத்தது...’’ என்று சொல்லும் மகாலட்சுமி, முதல் இடத்தை பிடிப்பதற்காக பயிற்சியாளர் ரமேஷிடம் பயிற்சி பெற ஆரம்பித்திருக்கிறார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற ரமேஷ், தனக்கு தெரிந்த அனைத்து நெளிவு சுளிவுகளையும் மகாலட்சுமிக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

‘‘பயிற்சி தந்த உத்வேகத்தில் 2010ம் ஆண்டு கிரீஸ் நாட்டில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டேன். ஒரு சில நொடிகளில் முதல் வாய்ப்பை தவறவிட்டு மூன்றாவது இடம் வந்தேன். இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளிலும் பரிசு கிடைத்தது. ஆனால், முதலிடம் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.

நன்கு பயிற்சி எடுத்தும் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் விருட்சமாக வளர்ந்தது. போட்டி நேரத்தில் ஏற்படும் டென்ஷன்தான் முதலிடத்தை நான் தவற விடக் காரணம் என்பதை உணர்ந்து கொண்டேன்...’’ என்றவர், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியை ஜாலியாக எதிர் கொண்டுள்ளார்.

‘‘பதினான்கு வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச போட்டியில் பங்கேற்றபோது படபடப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டேன். அதனால்தான் ஆசைப்பட்டபடி முதல் இடத்தை பிடிக்க முடிந்தது...’’ என்று மகாலட்சுமி சிரித்து முடிக்கவும், பயிற்சியாளர் ரமேஷ் தொடர்ந்தார். "ஐந்து வருடங்களுக்கு முன் செஸ் விளையாட்டுக்கான பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன். முதல் மாணவியாக சேர்ந்தது மகாலட்சுமிதான். செஸ் விளையாட்டின் மேல் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால், அதற்கு செலவு செய்யும் நிலையில் அவரது குடும்பச் சூழல் இல்லை.

திறமையான ஒருவரை பணமில்லாத காரணத்தால் ஒதுக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே இலவசமாக மகாலட்சுமிக்கு பயிற்சி அளித்தேன். எங்கள் மையம், அவரது வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. அதற்காக மகாலட்சுமி வருத்தப்படவில்லை. பதிலாக நாள்தோறும் பயிற்சிக்கு வந்தார். பல நாட்கள் பள்ளியில் இருந்து நேராக பயிற்சிக்கு வருவார். பயிற்சி இடைவேளையில் வீட்டுப் பாடங்களை செய்வார். இப்படி கஷ்டப்பட்டு உழைத்ததால்தான் மகாலட்சுமியால் சர்வதேச அங்கீகாரத்தை பெற முடிந்தது...’’ என்கிறார் ரமேஷ்.

                                            

விடைபெறும்போது மகாலட்சுமி சொன்ன பன்ச்தான் முக்கியமானது. ‘‘செஸ் என்பது வெறும் விளையாட்டல்ல. நமது நினைவாற்றலை அதிகரிக்க வைக்கும் ஒரு சக்தி. விளையாட்டில் எதிராளியை எப்படி மடக்கலாம் என்று யோசிப்போம். அந்தத் திறன் வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானத்துக்கும் உதவும். அத்துடன் கணக்கு பாடமும் நன்றாக வரும்...’’

நன்றி : குங்குமதோழி

4) ஆகாயத் தாமரையை முற்றிலும் அழிக்க, "பயோ பைன்' மருந்தை கண்டுபிடித்துள்ள பேராசிரியர், ராஜேந்திரன்:

நான், மதுரையில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில், உயிர் தொழில்நுட்ப பிரிவு, தாவரவியல் பேராசிரியராக பணியாற்றுகிறேன். தமிழக நீர் நிலைகள், கோடையின் வெப்பத்தால் வற்றி விட்டாலும், பச்சை கம்பளம் போர்த்தியது போல், கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்க, ஆகாயத் தாமரையே காரணம்.

"வாட்டர் ஹயான்சித்' என, அழைக்கப்படும் ஆகாயத் தாமரைகள், நீர் நிலைகளிலிருந்து அதிகப்படியான நீரை உறிஞ்சி, வற்றச் செய்வதன் மூலம், நீர் நிலைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன. இது, நீரில் வாழும் ஒரு வகையான, களைச் செடி இனத்தை சேர்ந்தது. ஆகாயத் தாமரைகளை முற்றிலும் அழிப்பதற்கு, உள்ளாட்சி அமைப்புகள் சிரமப்படுகின்றன. நீர் நிலைகளில், புல்டோசர் மூலம் சுத்தம் செய்தாலும், முற்றிலும் அழிக்க முடியாத நிலை உள்ளது.சுத்தமான நீர் நிலைகளை விட, அசுத்தமான நீர் நிலைகளிலேயே அதிகம் வளர்வதால், இவற்றை அழிப்பதற்கான மருந்தோ அல்லது மாற்று நடவடிக்கையோ, இதுவரை எடுக்கவில்லை.
                                             

அதனால், ஆகாயத் தாமரையை மருந்து மூலம் ஒழிப்பதற்கு, நான் முயற்சித்து, "பயோ பைன்' எனும் மருந்தை கண்டுபிடித்தேன்.இதை, ஆகாயத் தாமரையின் மேல் பரப்பில் தெளித்தால், இரண்டே நாட்களில் பட்டுப் போய் விடும். இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படுவதால், நீர் நிலைகளில் இதை தெளிப்பதன் மூலம், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நீரில் உள்ள பாக்டீரியாக்கள், "லார்வாக்கள்' எனும் கொசுக்களின் முட்டைகள் போன்றவற்றையும் அழிக்கிறது.ஆகாயத் தாமரைகளை, நீர் நிலைகளிலேயே பட்டுப்போகச் செய்வதால், எவ்வித துர்நாற்றமும் வீசாது. தற்போது, ஒரு லிட்டர் பயோ பைனை, 350 ரூபாய்க்கு தயாரிக்கிறோம். உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், விலையை குறைக்கலாம். தொடர்புக்கு: 94439 98480.
             
5) சென்னை நகரில் மன நிலை பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பலர் திரிகின்றனர். அவர்களை பெரும்பாலோர் வேடிக்கை பார்ப்பர்; சிலர் பரிதாபப்படுவர்; சிலர் மட்டுமே உணவு வாங்கி தந்து செல்வர்.ஆனால், அவர்கள் பற்றிய தகவல் கிடைத்தால், இரவு, பகல் பார்க்காமல் எந்நேரமும் ஆஜராகி அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் மீட்டு ஆதரவற்றோர் முகாமில் சேர்ப்பதை கடமையாக கொண்டுள்ளார் சமூக சேவகர் வெங்கடேஷ், 48.திருவான்மியூரை சேர்ந்த இவர், பணிநேரம் தவிர மற்ற நேரத்தை ஆதரவற்றோருக்காக செலவிடுகிறார். அவரிடம் பேசியதில் இருந்து...        
                                                     
மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? 
   
கடந்த, 1995ம் ஆண்டு, நான் கூரியர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். வேலை தொடர்பாக பழைய மகாபலிபுரம், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தேன்.அப்போது, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் நிர்வாண நிலையில் சாலையில் சுற்றி கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கானோர் பார்த்தபடி சென்றனர். அந்த பெண்ணின் நிலைமை என்னை மிகவும் வருத்தமடைய செய்தது. உடனடியாக அருகில் உள்ள வீட்டிற்கு சென்று பழைய புடவை ஒன்று வாங்கி, அந்த பெண்மணிக்கு போர்த்திவிட்டு, அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆதரவற்றோர் இல்லத்தை தேடி ஒப்படைத்தேன்.அன்று எனக்கு ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த செயல் எனக்கு மிகவும் பிடித்து போனது. அன்று முதல் அதை ஒரு கடமையாக செய்து வருகிறேன். 
இந்த பணியில் ஒத்துழைப்பு இருக்கிறதா? நேரம் காலம் பார்ப்பீர்களா?
   
தற்போது, சென்னையில் ஆதவற்றோரை பார்த்தால் உடனடியாக என்னை தொடர்பு கொண்டுவிடுகின்றனர். போலீசாரும் அழைத்து தகவல் கொடுக்கின்றனர்.கடந்த 2007ம் ஆண்டு, அரசு பணி கிடைத்த பின்னும், இந்த கடமையை விட்டு விடவில்லை. பணிநேரம் தவிர மாலை, 6:00 முதல் இரவு, 11:00 மணி வரை இந்த கடமையை செய்து வருகிறேன். 
      
இதற்கு மன அளவில் எப்படி தயாரானீர்கள்?
                
பல இடங்களில் பாதிக்கப்பட்டோர், பார்க்கவே அருவருப்பாக, நெருங்கவே முடியாத நிலையில் இருப்பர். அவர்களிடம் இருந்து கடும் துர்நாற்றம் வீசும். துவக்கத்தில் சங்கடமாக தான் இருந்தது. பிறகு அதுவே பழகி விட்டது. அவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று, நம்மை போல மனிதர்களாக உருமாறியதை பார்க்கும் போது மிகவும் பெருமைப்பட்டு கொள்வேன். அவ்வாறு மாறிய ஒவ்வொருவரையும் என் கடமைக்கு கிடைத்த விருதாகவே கருதுகிறேன்.

மிக சிரமமான இந்த பணியில், பொருளாதார ரீதியில் எப்படி சமாளிக்கிறீர்கள்? 
                  
நான் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியவன். ஆனால், எனக்கு உதவி செய்வதற்காக சென்னை நகரின் பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், 20க்கும் மேற்பட்ட கால் டாக்சி ஓட்டுனர்கள் உள்ளனர்.சில தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு, அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போன் செய்தால் உடனடியாக வந்து விடுவர். பலர் பணம் வாங்கமாட்டார்கள். ஒரு சிலர் கொடுப்பதை வாங்கி கொள்வர். இந்த பணிக்கு என் குடும்பத்தார் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். பல நேரங்களில் என் மகள், என்னுடன் வந்து பாதிக்கப்பட்டோரை மீட்டுள்ளார். இதில், என் அடுத்த வாரிசாக அவர் உருவாவதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் தான்.

                 
6)  ஈரோட்டில் திரு .வெங்கட்ராமனால் நடத்தப்பட்டு வரும் ஸ்ரீஏ எம் வி ஹோட்டல்.ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மத்தியில் மிகப் பிரபலம்.


இவ்வுணவகத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சலுகைகள்.

                             
             
விழியிழந்தோருக்கு-20%தள்ளுபடி.

உடல் ஊனமுற்றோருக்கு-10 % தள்ளுபடி.
அரசுமருத்துவமனைக்கு வரும் மிகவும் வசதி குறைந்த நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு.  
7) சிலி நாட்டில் ஒரு வீட்டில் திடீரென்று தீ பிடித்து கொண்டது. கார் குண்டு வெடித்ததால் அந்த தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டில் ஒரு நாயும் பிறந்து 15 நாட்களே ஆன நாய் குட்டிகளும் இருந்தன.

அமெண்டா என்ற அந்த நாய் தான் ஈன்ற குட்டிகளை நெருப்புக்குள் பாய்ந்து ஒவ்வொன்றாக வாயால் கவ்வி எடுத்து கொண்டு வந்து தீ அணைப்பு வாகனத்தில் வைத்து காப்பாற்றியது.

         

தீ அணைப்பு வீரர்கள் அந்த நாயின் செயலை ஆச்சரியமாக பார்த்தனர். எல்லா நாய் குட்டிகளையும் காப்பாற்றிய அமெண்டா குட்டிகளின் பயத்தை போக்க அவைகளை அணைத்தபடியே படுத்து கொண்டு இருந்தது.
 
ஒரு நாய் குட்டி மட்டும் தீ காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது.கால்நடை மருத்துவருக்கு போன் செய்து அந்த நாய் குட்டிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர்.
     
எங்கு பார்த்தாலும் வெடி குண்டு கலாச்சாரம் .இந்த நாய்க்கு இருக்கும் தாய் பாசம் கூட வெடிகுண்டு வைக்கும் அந்த நாய்களுக்கு இருப்பதில்லை. (முகநூல் -ரிலாக்ஸ் ப்ளீஸ் பக்கம்) 
   
8) ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இந்த பெண், குதிரையின் மீது சவாரி செய்து கொண்டு இருக்கும்போது, எதிர்பாராதவிதமாக பெண்ணும் குதிரையும் சேற்றில் சிக்கி கொண்டனர்.    
                           

மீட்பு பணியாளர்கள் வரும்வரை குதிரையின் தலை சேற்றில் மூழ்காதவாறு தன் குதிரையின் கழுத்தை மூன்று மணி நேரம் தூக்கி பிடித்தபடியே இருந்தாரம் இந்த பெண்.  
                   
தானும் ஆபத்தில் சிக்கி இருந்தாலும் தன உயிருக்கு ஈடாக தன குதிரையின் உயிரையும் எண்ணி காப்பாற்றிய இப் பெண்ணை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். (முகநூல் -ரிலாக்ஸ் ப்ளீஸ் பக்கம்)
9)பெங்களூரு: சிறுவயதில் பேப்பர் போடும் பையனாக வாழ்க்கையைத்துவக்கி, கடுமையாக உழைத்து, தற்போது கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் படிக்கவுள்ள பெங்களூருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது வாழ்க்கை, மனஉறுதிக்கும், தன்னம்பிக்கைக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
  
சிவக்குமார். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் மிகவும் ஏழ்மையான தனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன், தனது 5வது வகுப்பு முதல் பேப்பர் போடும் தொழிலை மேற்கொண்டு வரும் தன்னம்பிக்கை மனிதர். தன்னுடைய வாழ்க்கை குறித்து சிவக்குமார் குறிப்பிடுகையில், "நான் எனது 5வது வகுப்பு படிக்கும் போதில் இருந்து பேப்பர் போடும் தொழிலை செய்து வருகிறேன். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த எனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த எனக்கு ஒரு தொழில் தேவைப்பட்டது. பின்னர் எனது 10ம் வகுப்பு முதல் தனியாக ஏஜென்சி ஒன்றை எடுத்து தற்போது வரை பேப்பர் விநியோகம் செய்து வருகிறேன்" என்று தெரிவித்தார்.
   
அந்த வருமானத்தில் இன்ஜினியரிங் முடித்துள்ள சிவக்குமார், கேட் தேர்வு எழுதி தற்போது கோல்கட்டாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் கல்வி பயில உள்ளார். "மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எனது வேட்கைக்கு என் தொழில் என்றுமே தடையாக இருந்ததில்லை. ஏனெனில் நான் எனது தொழிலை விரும்புகிறேன். இதன் மூலம் எனது குடும்பத்தை சிறப்பாக கவனித்துக்கொள்வதால், ஒவ்வொரு இரவும் என்னால் நிம்மதியாக தூங்க முடிகிறது" என்கிறார் சிவக்குமார்.
     
சிவக்குமாரின் தாயார் ஜெயம்மாவுக்கு தனது மகன் குறித்து மிகவும் பெருமிதம். 5ம் வகுப்பிலிருந்து தற்போது வரை அவன் போராடிக்கொண்டிருக்கிறான். இந்தளவு அவன் முன்னேறியது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் அந்த தாய்.
                                       
சிறுவயதில், வறுமை காரணமாக, குடும்பத்தினரால் படிப்பிற்கு உதவமுடியாத சூழல் வந்த போது, தனது படிப்பிற்கு உதவும்படி ஒருவரை அணுகியுள்ளார் சிவக்குமார். அவருக்கு சிவக்குமாருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும், சிவக்குமாருக்கு உடனடியாக உதவி செய்யாமல், அவர் கல்வி கற்கும் பள்ளிக்கு வந்து அவரது நடவடிக்கைகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்ட பின்னர், அந்த ஓராண்டிற்கான படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுள்ளார்.
                        
எனது எதிர்கால நடவடிக்கை குறித்து சிவக்குமார் கூறுகையில், கோல்கட்டா ஐ.ஐ.எம்.,மில் தனது படிப்பை முடித்த உடன், எஜூகேட் இந்தியா பவுண்டேஷன் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நிறுவி, அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு கல்வி அளிப்பதே தனது லட்சியம் என்கிறார் இந்த லட்சிய மனிதர்.
                  
10) எங்கள் விஎம் பவுண்டேசன் வழியாக நடத்தப்படும் பி.எஸ்சி டிஜிட்டல் பப்ளிசிங் பட்டப்படிப்பு முழுமையாக இலவசம். ஒரே தகுதி : +2 பாஸ் மற்றும் எங்கள் நுழைத்தேர்வில் தேர்ச்சிபெறவேண்டும். மேலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இந்தியாவிலேயே படிப்பதற்கு பணம் தருபவது இங்கேவாகத்தான் இருக்கும் :)

வசதியில்லாமல் தவிக்கும் மாணவர்களுக்கு இந்த பட்டப்படிப்பு ஒரு வாய்ப்பாக அமையும் .உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை தெரிவியுங்கள் நண்பர்களே!!

மேலும் விபரங்களுக்கு விஎம் பவுண்டேசன். : 04341252425, 9943094945
===============  
11) அகமதாபாத் ஆட்டோ ஓட்டுனர் ராஜு பர்வாத். 
       
  
ஒரு 'நோ பால்' போட சில லட்சங்கள், ஒரு 'ஒய்ட் பந்து' வீச மேலும் சில லட்சம் என்றெல்லாம் பேரம் பேசி சம்பாதிக்கின்ற இந்த நாட்களில், தன் பெயருக்குக் கொடுக்கப்பட்ட, தனக்கு உரிமை உள்ளதாகக் கருதப்பட்ட, ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் ரூபாய்கள் மதிப்புள்ள காசோலையை, திருப்பித் தந்துள்ளார், ராஜு.   
    
யார் கொடுத்தார்கள்? 
               
குஜராத் வாணிப வளர்ச்சிக் கழகம். (GIDC)  
    
ஏன் பணம் கொடுத்தார்கள்?    
    
டாட்டா நானோ கார் தொழிற்சாலைக்கு சனந் நகரில், ராஜூவின் மூன்று பிகா (சற்றேறக்குறைய ஒரு ஏக்கர்) நிலம் கையகப் படுத்தப் பட்டதற்காக. அரசாங்க ஏடுகளில் அந்த நிலம், ராஜு பெயரில் காட்டப்பட்டிருந்தது.   
       
ஏன் திருப்பிக் கொடுத்தார்? 
     
ராஜுவின் மூதாதையர்கள் வழியாக, அவர் பெயரிலும் ராஜுவின் அம்மா பலுபென் பெயரிலுமாக சேர்ந்து, பத்து பிகா நிலம் இருந்தது. அந்தப் பகுதியில் மூன்று பிகா நிலத்தை, முப்பது வருடங்களுக்கு முன்பு, ஐந்து லட்ச ரூபாய்களுக்கு ராஜூவின் தாத்தா விற்றிருந்தார். ஆனால், இந்த விற்பனை அரசாங்க ஏடுகளில் பதியப்படவில்லை. தன் பெயரில் நிலம் இருந்தாலும், அதில் தனக்கு உரிமை ஏதும் இல்லை என்பதால், காசோலையைத் திருப்பித் தந்தார்.   
     
பிறகு என்ன செய்தார்?   
    
நிலம் யாருக்கு உரிமையோ அவர்களின் விவரம் அரசாங்க ஏடுகளில் இடம் பெறுமாறு பார்த்துக் கொண்டார். அவர்களிடம் பணம் சென்று சேர ஏற்பாடு செய்தார். 
     
ராஜூ என்ன சொல்கிறார்? 
          
தன் மனைவி, மூன்று குழந்தைகள், வயதான அம்மா ஆகியோருடன், இரண்டே அறைகள் கொண்ட சிறிய வீட்டில் வாழ்ந்து வரும் ராஜூ கூறுகிறார்: " என்னுடைய பெற்றோர் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம், நேர்மை. நேர்வழியில் அல்லாது வந்த பணம் என் குடும்பத்திற்கு வேண்டாம். இப்பொழுது எனக்கு வருகின்ற மாத வருமானம் ஆறாயிரமும், என் பெயரில் உள்ள நான்கு பிகா நிலமும், நானும் என் குடும்பமும் கண்ணியமாக இன்றும், என்றும் வாழ போதுமானது!"
           
குஜராத் வாணிப வளர்ச்சிக் கழகத்தின் அதிகாரி நவீன் படேல் கூறுகிறார்: "எவ்வளவோ நிலத் தகராறுகள் எங்கள் கவனத்தில் வந்துள்ளன. இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை வேண்டாம் என்று ஒருவர் திருப்பி அளித்தது இதுவே முதன் முறை."