வியாழன், 15 மார்ச், 2012

அமானுஷ்ய அனுபவங்கள் 02

               
இரண்டு தெரு தள்ளியிருந்தவர்கள் அன்று ஒரு நாள் சாதாரணமாகக் கேட்டார்கள்...
          
"உங்க தெருவில் இருக்கற வேப்ப மரத்துல பூஜை செய்துக்கலாமா? எங்க பேரனுக்கு நாளை முடியிறக்கணும்..."
                 
"ஓ... அதுக்கென்ன.... இதில் என்ன இருக்கிறது...? தாராளமாய்க் கும்பிட்டுக் கொள்ளுங்கள்...!" மனைவி சாதாரணமாய்ச்  சொல்லி விட்டு வீடு வந்து என்னிடமும் சொன்னாள்.
   
"நான் கூட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேப்ப மரத்துக்குக் கோலம் போட்டு பூ வைத்து பூஜை செய்யறேனே.... அவங்களும் கேக்கறாங்க.. சரின்னுட்டேன்"

இதுல என்ன இருக்கு என்பது போல நானும் பட்டுக் கொள்ளாமல் மையமாக மண்டையாட்டி விட்டு என் வேலையைப் பார்க்கச் சென்று விட்டேன்.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. மாலை ஆறுமணி போல வெளியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தண்ணீர் குடிக்க உள்ளே வரும்போது பரபரப்புத் தகவல் சொன்னார்கள்...

"அடுத்த தெருக்காரங்க வந்து அந்த வேப்ப மரத்தடியில் சேவலை வெட்டறாங்க..." 

"எந்த மரம்டா... நம்ம மரமா?" நம்ம மரமா என்று என் மனைவி கேட்டது. 'தான் பூஜை செய்யும் மரமா' என்ற பொருளில்.

"இல்லம்மா... கொஞ்சம் தளளி இருக்கற இன்னொரு மரம்..."
  
என்னைப் பார்த்தாள் மனைவி. "அவங்க கும்பிடற முறையா இருக்கும்" என்றேன்..

அப்புறம் இருட்டியதும் மொட்டை மாடியியில் அமர்ந்திருந்தோம். அந்த வீட்டுப் பெண்கள் நான்கைந்து பேர்கள் கூடை, மரம், விளக்குமாறு, சிறு வாளியில் தண்ணீர் என்று வந்தார்கள். சுவாரஸ்யம் கூடியது.

மரத்தடியைப் பெருக்கிச் சுத்தம் செய்தார்கள். தண்ணீர் தெளித்தார்கள். வயதான பெண்மணி ஒருவர் மரத்தடியில் ஈர மண்ணில் ஒரு சதுர வடிவில் வீடு கட்டுவது போல லேசான குழியுடன் கட்டம் கட்டினார். அப்புறம் உள்ளே ஒரு சதுரம். வெளிச் சதுரத்துக்கு வெளியில் செல்வது போல ஒரு வாசல். அந்த லேசான குழியில் காய்ந்த மண்ணால் நிரப்பி இன்னொரு பெண் அந்தக் கட்டங்களுக்கு ஒரு தோற்றத்தை உருவாக்கினார். சதுரங்களின் நடுவில் எல்லாம் மேடு உண்டாக்கி இன்னும் நிறமாக மண்ணடுக்கி ரத்தக் கலர்ப் பூவை அதில் வைத்தார்கள். உள் சதுரம், வெளிச் சதுரம் ரெண்டும் சேர்த்து பதினோரு மேடுகள். அதனை பதினோரு வீடுகள் என்றனர்.  
    
அப்புறம் வெட்டிய சேவலின் தலையை கொண்டு வந்தனர். புதிருடனும் குழப்பத்துடனும் பார்த்துக் கொண்டிருந்த எங்களை அங்கு அப்போதுதான் வந்து மேற்பார்வையிட்ட அவர்கள் வீட்டு ஆண்கள், எங்களை உள்ளே போகச் சொல்லி விட்டு அவர்களும் அங்கிருந்து அகன்றனர். 
    
கொஞ்ச நேரத்தில் என் மனைவியின் தம்பியும் அவன் மனைவியும் வந்து சென்றனர். அவர்களும் "அக்கா... அங்க ஏதோ நடக்குது... சேவல் தலையை வெட்டி வச்சிருக்காங்க.." என்று சொல்லிச் சென்றனர்.
     
மறுநாள் எங்கள் ஏரியா புயலடித்தது. சுற்றி இருந்த மற்ற வீட்டுக் காரர்கள் இதை எப்படி நாங்கள் அனுமதித்தோம் என்று ஆவேசப் பட்டனர். 'கேட்டுக் கொண்டுதான் செய்தார்கள்' என்றாள் மனைவி. . 'பேரனுக்கு முடியிறக்க என்று கேட்டும் எப்படி அனுமதித்தீர்கள்' என்று ஒரே கேள்வி மயம்.எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  
      
அப்புறம் எல்லோரும் சொல்லியதிலிருந்து தெரிந்து கொண்டது.

அது ரத்தக் காட்டேரி பூஜையாம். முனீஸ்வரர் பூஜை என்பது சற்று தேவலாம் ரகமாம். இது மிக மோசமான காவல் தெய்வமாம். பெண்கள்தான் செய்வார்களாம். ஆண்கள் யாரும் இருக்கக் கூடாதாம். குறிப்பாக வீட்டின் மூத்த மகனுக்கு ஆகாதாம். ஊருக்கு வெளியே, ஆள் நடமாட்டமில்லாத இடத்தில்தான் - குறிப்பாக ஆற்றங்கரையோரம்தான் - இந்த பூஜை செய்வார்களாம். மிக முக்கியமாக சேவல் வெட்டுவதையும், அதன் தலையை வைத்து பூஜை செய்வதையும் யாரும் வெளியாட்கள், குறிப்பாக ஆண்கள் பார்க்கக் கூடாதாம்.
      
எனக்கோ என் மனைவிக்கோ இதில் பயம் ஏதுமில்லை. 'எந்த தெய்வமும் கெடுதல் செய்யாது. கெடுதல் செய்தால் அது தெய்வமில்லை' என்றேன் மனைவியிடம்!. என் மகன்களும் பயப்படவில்லை. ஆனால் மற்றவர்கள் ரகம் ரகமாக பயந்து, பீதி வசப்பட்டனர்! உச்சி வெயிலில் அந்த இடத்தை, மகனோ, மகளோ, வீட்டுக்கு மூத்த குழந்தை தாண்டக் கூடாது என்றனர். செய்தவர்களை எப்படி இங்கு நீங்கள் பூஜை செய்யலாம் என்று கேளுங்கள் என்றனர். சரியா தவறா என்று அவர்களையே கேளுங்கள் என்றனர். 

மனைவி கேட்டாள். அந்த வீட்டு மாமியார் பயம் ஒன்றுமில்லை என்றார். அவர்கள் வீட்டு மருமகள் தனியாய் வந்து கொஞ்சம் ரிஸ்க்தான் என்றார்! 

இரண்டு வீடுகளில் அவர்கள் வீட்டிற்கு வந்த ஒரு சாவுச் செய்திக்கும், இன்னொரு வீட்டில் அவர்கள் குடும்பத் தலைவர் மயிரிழையில் ஒரு விபத்திலிருந்து தப்பியதற்கும் இதைக் காரணமாகச் சொல்லி டென்ஷன் ஆனார்கள்! 

இதற்கிடையில் இந்தப் பின் கதையெல்லாம் தெரியாத நிலையிலேயே என் மனைவியின் தம்பி திடீர் என்று காய்ச்சலில் விழுந்தான். 'சேவல் தலை' என்று அவன் உளறியதாக சித்தி தொலைபேசியில் சொன்னபோது மட்டும் சற்றே பயம் வந்தது. நம் வீடு பரவாயில்லை. அவர்கள் இதெல்லாம் தெரிந்தால் என்ன சொல்வார்களோ என்ற மனைவிக்குக் கவலை வந்தது.
      
பக்கத்து வீட்டுக் காரர்கள் சொன்ன இன்னொரு விஷயமும் நடந்தது. எங்கிருந்தோ ஒரு கருப்பு நாய் வரும் என்றார்கள். அன்று மாலை - பூஜை நடந்த மறு நாள் மாலை - ஒரு கருப்பு நாய் அங்கு படுத்து இருந்தது! முதல் நாள் இரவிலிருந்தே அது அங்கு இருப்பதாக மகனின் நண்பர்கள் பயமூட்டினார்கள்.துரத்தினாலும் முறைக்கிறதே தவிர போக மாட்டேனென்கிறது என்றார்கள். நான் தாண்டிச் சென்றபோது மர மறைவிலிருந்து எழுந்து வெளியில் வந்து என்னைப் பார்த்தபடி நின்று விட்டு மறுபடி பின்னால் சென்று படுத்துக் கொண்டது. நான் அதுவரையிலும் அந்த நாயை இந்த ஏரியாவில் பார்த்ததில்லை!
     
கொலையுதிர்காலத்தில் வசந்த் கேட்கும் 'என்ன சார் காட்டேரி விடறீங்க' வசனம் நினைவுக்கு வந்தது!
   
அன்று இரவு எதிர்பாராமல் வந்த மழை வேறு அந்த இடத்தை ஈரமாக்கி விபரீதத் தோற்றம் கொடுத்தது.
          
இதையும் அந்த பூஜையை  செய்தவர்கள் வீட்டுப் பக்கம் போனபோது மனைவி அவர்கள் வீட்டில் சொன்னதும் அவர்கள் வீட்டின் மூத்த ஆண் கோபப் பட்டார். 'இந்த பூஜை பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாதே.. சொல்லியிருக்கலாமே' என்றதும் சட்டென வெளியேறி பூஜை நடந்த இடம் வந்தவர் பூஜை நடந்த இடத்தைக் கலைத்துப் போட்டார். 
    
அப்புறமும் அருகிலிருந்தவர்கள் விடவில்லை. கலைத்ததுதான் இன்னமும் தவறு என்றார்கள். 
           
எங்கள் வெளி நண்பர்கள் இரண்டு மாதிரியும் பேசினார்கள். இந்த பூஜை வெளியிடங்களில்தான் செய்வார்கள் என்றாலும் உங்கள் தெருவுக்கே இது இனி காவல் தெய்வம், பயமில்லாமல் இருங்கள் என்றார் என் நண்பர். என் மனைவியின் தோழியோ 'அவர் தவறாகச் சொல்கிறார்...இது கடும் பின் விளைவுகளை ஏற்படுத்தும்' என்றார்!
                   
எது எப்படியோ, அந்த இடம் கலைக்கப் பட்ட சில மணி நேரங்களுக்குப் பின் அந்த கருப்பு நாய் கண்ணில் படவில்லை. 
    
தம்பி காரணமில்லாக்  காய்ச்சலிலிருந்து ஒரு வாரத்தில் விடுபட்டான். 
               
ஒரு வாரத் திகில், சிரிப்பு கலந்த பயம் போன்ற அனுபவங்களுக்குப் பிறகு....
                 
தற்போது எல்லாம் சுபம்!  
                   

18 கருத்துகள்:

  1. இதுபோன்ற அனுபவங்களில் எல்லாம் வேலை செய்வது நம்பிக்கைதான். பயப்பட்டால் விபரீத அனுபவம். புறந்தள்ளி விட்டால் சாதாரணம். படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. ஆளைவிடுங்க சாமி. சாயந்திர வேளைல:)
    எங்க வீட்டுப் பக்கத்தில ஸ்ட்ரே டாக்ஸ் நிறைய இருக்கு. இன்னிக்கு நான் தூங்கின மாதிரிதான்!!!

    பதிலளிநீக்கு
  3. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

    பதிலளிநீக்கு
  4. நிச்சய‌ம் பயம், திகில், கலந்த அமானுஷ்ய அனுபவம் தான். சின்ன வயதில் உற‌வுப்பெண்ணின் அதட்டலில் பயந்து கொண்டு வேப்பமரத்துக்கு அம்மன் என்று சொல்லி வேப்பம்பழங்கள் கொண்டு அர்ச்சித்து கும்பிட்டது ஞாபகம் வந்தது!!

    பதிலளிநீக்கு
  5. ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

    http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

    பதிலளிநீக்கு
  6. படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது.
    நம்புகிறவர்களுக்கு எல்லாமே பெரிது தான்....
    நம்பாதவர்களுக்கு எதுவுமே இல்லை.
    ஒரு காலத்தில் கிராமத்து கோவில்கள் எல்லாமே
    பார்க்க பயமூட்டுவதாய் தான் தெரிந்தது.
    காடுகளும்,மரங்களும் காணாமல் போனபின்
    எல்லாமே சாதாரணமாய் ஆகிவிட்டன.

    பதிலளிநீக்கு
  7. கறுப்பு நாயும், உடல் நலம் சரியில்லாமல் போனதும் தற்செயலாக இருந்திருக்கலாம். ஆனால் படிக்க த்ரில்லிங்கா இருந்தது.

    பதிலளிநீக்கு
  8. ரத்தக் காட்டேறி இறங்கி வரணும்னா பித்தக்காட்டேறி பூசை செய்யணும். ஆண்கள் தான் செய்யணும். பெண்கள் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்துவிட்டால் புனிதவதி கா அ ஆன கேஸ். அதிகாலை மூன்றுமணி வாக்கில் செய்ய வேண்டும். ஈர வேட்டி அணிந்து வேட்டி காயுமுன் செய்ய வேண்டும். பித்தக்காட்டேறி இறங்கி வரும்பொழுது இரண்டு காலும் ஒருங்கே தலையில் பதியாதவாறு பாதங்களை மாற்றித் தத்த வேண்டும். சில சமயம் பித்தக்காட்டேறி பளாரென்று கன்னத்தில் அறையும். கவனமாக இருக்க வேண்டும். பம்மல் அனகாபுத்தூர் பக்கம் போனால் பித்தக்காட்டேறி பூஜை பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  9. பதிவை படிக்க போது கொஞ்சம் பயமாதான் இருந்துது. என்னதான் பூஜைன்னாலும் இதெல்லாம் கொஞ்சம் இல்லை, ரொம்பவே ஓவர்தான். நல்ல வேளை
    இங்க வேப்பமரம், புளியமரம், முருங்கை மரம் எல்லாம் கிடையாது.

    என்ன பித்தகாட்டேறி பூஜையா? கேள்விபட்டதே இல்லையே. அதனால என்ன பரவாயில்லை, போகட்டும். ஆனா, எதுக்கு அப்பாதுரை ரத்தகாட்டேறி இறங்கி வரணும்? அதுபாட்டுல அது பாவமா எங்கேயோ இருந்துட்டு போவட்டுமே. எதுக்கு இப்படி பூஜை எல்லாம் பண்ணி அதை தொந்தரவு பண்ணி கூப்டணும். ஏற்கெனவே பதிவை படிச்சுட்டு நான் ஒரு மாதிரி த்த்த்த்த்தை ஐ ஐ ஐ ஐ ஐ ரியமா இருக்கேன். நீங்கவேற இப்படி எல்லாம் பின்னூட்டம் எழுதி என்
    த்த்த்த்த்த்தைரி ரி ரி ரி ரியத்தை ரொம்பவே சோதிக்கறீங்களே! நானும் இன்னிக்கு தூங்கின மாதிரிதான். :( எது ஞாபகம் வரதோ இல்லையோ, தூங்க போகும்போது மட்டும் கரெக்டா இதெல்லாம் ஞாபகம் வந்துடும். :)

    பதிலளிநீக்கு
  10. எல்லாம் சும்மா.இப்பிடிப் பார்த்தா நம்ம நாட்டில அவலமாச் செத்தவங்க எல்லாம் பேயா வந்து அங்க இருக்கிறவங்களைக் கொன்னிருக்கனுமே.எல்லாம் பொய் பொய் பொய் !

    பதிலளிநீக்கு
  11. மீனாக்ஷி,துரை சொல்வது பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே குறி சொல்லும் சாமியார்கள் உண்டு.
    எங்கள் வீட்டில் வேலை செய்த கற்பகம் என்னும் பெண், அங்கே போய் வருவாள்.
    அவளைப் பார்க்கவே பயமாக இருக்கும். என் மாமியார் அவளைக் கொஞ்ச நாள் ஓய்வெடுத்துக்கோன்னு பணம் கொடுத்து அனுப்பிட்டாங்க:)

    பதிலளிநீக்கு
  12. பயத்தினாலேயே பாதி பேருக்கு காய்ச்சல் வந்திருக்கும்தான்.

    2 வாரம் முன்னர் பெங்களூர் நண்பர் ஒருவர் சொன்னது. அவர் வீட்டுக்கு மேல் தளத்தில் தன் வீட்டுக்கு எதிரே ஆனால் பொதுவான இடத்தில் ஒரு பெண்மணி ஏதேதோ கோலமிட்டு பூஜைசெய்து வைக்க அதைத் தாண்டிச் சென்றவருக்கெல்லாம் உடல் நிலை மோசமானதாம். மற்றவர் தட்டிக் கேட்கப் போய் கைகலப்பில் முடிந்து போலீஸ் வரை விஷயம் போனதாம்.
    அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்றாலும் பொது இடங்களில் மற்றவருக்கு பீதி ஏற்படும்படி செய்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றென்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  13. கோழித் தலைக்கே இப்படி பயப்படுகிறீர்களே..எங்கள் தெரு முனையில் முழுக் கோழிகளையே வெட்டித் தொங்கவிட்டிருப்பார்கள்... மஞ்சள் குங்குமம் எதுவும் தடவி இருக்காது.. ஆனால் நிறைய கறுப்புப் பைகள் தொங்கிக்கொண்டிருக்கும்... ஆனால் கடந்து போகும் போது பயம் துளியும் வராது...... ஹி ஹி கண்டுபிடித்திருப்பீர்களே... கோழிக்கடை

    பதிலளிநீக்கு
  14. எத்தனை எத்தனை நம்பிக்கைகள் மனிதர்களுக்கிடையில் !!

    பதிலளிநீக்கு
  15. ம்ம்ம்ம் என்னமோ போங்க; இந்தக் காலத்திலேயும் இப்படியும் நடக்குதா! நடந்துட்டுப் போகட்டும். இன்னிக்கு ராத்திரி பைரவி சீரியல் பார்த்துட்டு அதிலே வர ஆவியைப் பார்த்தா எல்லாம் சரியாப் போகும். இரண்டு வாரமா ஆவியைப் பார்க்கவே இல்லை. :)))))))

    பதிலளிநீக்கு
  16. இங்கே நியூஸியில் வீடு வாங்குன புதிதில் வார்ட்ரோப் மேலே இருந்த ஷெல்ஃபில் ஒரு மேரிமாதா சிலை கிடைச்சது. ஹைய்யான்னு எடுத்து ஷோ கேஸில் வச்சுக்கிட்டேன். அப்புறம் இன்னொரு தோழிக்குக்குத் தெரிஞ்ச இன்த ஊர்க்காரப்பாட்டி சொன்னாங்க. இன்த வீட்டில் பேய் இருக்குன்னு பூஜை பண்ணினாங்க. அப்ப வச்சதா இருக்கலாமுன்னு. அது திரும்ப வரலாமுன்னும் சொன்னாங்க.

    நானே பெரிய பேய். என் முன்னாலே அதாலே நின்னு ஜெயிக்க முடியாதுன்னேன். அந்த வீட்டில் 17 வருசம் இருந்தோம். நோ ஸைன் ஆஃப் பேய் !!!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!