சனி, 10 டிசம்பர், 2011

நாடென்ன செய்தது நமக்கு...

                  
பொழுது போகாமல் தொலைக் காட்சிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம். சுப்பிரமணியம் சுவாமியை ஹார்வர்ட் யுனிவர்சிட்டியிலிருந்து வெளியில் அனுப்பி விட்டார்கள், அவரின் பாடப் பகுதிகளை நீக்கி விட்டார்கள் என்றெல்லாம் செய்திகளை மேய்ந்து கொண்டிருந்தேன்.

   
ஒரு அரசு கேபிளில் தேவ் ஆனந்தின் பாடல்கள் வரிசையாகப் போட அவ்வப்போது அதையும் பார்த்துக் கொண்டிருந்தேன். 
   
அப்போது ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஒரு கேள்வி கேட்கப் பட்டது. அதுவும் நகைச் சுவை நிகழ்ச்சி.
  
பொதுமக்களைத் தெருவில் மடக்கிக் கேள்விகள் கேட்கும் நிகழ்ச்சி. 
   
"இந்த நாடு உங்களுக்கு என்ன செய்திருக்கிறது"

"ஒண்ணுமில்லை" 

இதுதான் எல்லோரது பதிலும்!
   
இந்த பதில் சரியான பதில்தானா... மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். 
     
அடுத்த கேள்வியும் தொடர்கிறது.
   
"நீங்கள் என்ன செய்தீர்கள் நாட்டுக்கு, அல்லது என்ன செய்ய விரும்புகிறீர்கள்?"
     
"நாடு எனக்கு ஒண்ணும் செய்யலை, எனவே நானும் நாட்டுக்கு ஒண்ணும் செய்ய விரும்பல..." - இது ஒரு வகை பதில். ஒன்றும் செய்யாமலிருப்பதே சில சமயம் நல்லது என்றும் தோன்றுகிறது!

"எனக்கு வர்ற வருமானமே ரொம்பக் கம்மி... இதுல நாட்டுக்கு நான் என்னத்தைச் செய்யறது..." - இது ஒரு வகை.

"கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து நான் கொடுப்பேன்" இது ஒரு பதில். யாருக்குக் கொடுப்பார்கள்? நாட்டுக்கு!
      
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குக் கூட தற்போதைய மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் பெயர்கள் தெரியவில்லை என்பதும் ஆச்சர்யம்.
             
இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளத் தோன்றாததால் பதிவிட்டு விட்டேன்.
                 
நாடு நமக்கு என்ன செய்ய வேண்டும்...?
             
நாம் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும்...?
               
எங்கள் வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன. 
                      

20 கருத்துகள்:

  1. நாட்டு நமக்குச் செய்யக் கூடியது:
    1. ஊழலை ஒழிப்பது
    2. சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு
    3. பாதுகாப்பு
    நாம் நாட்டுக்குச் செய்யக்கூடியது:
    1. வரிகளை ஒழுங்காகக் கட்டுவது.
    2. சரியான தலைவனைத் தேர்ந்தெடுக்கத் தேர்தலில் கட்டாயம் வாக்களிப்பது.
    3. பொதுச் சொத்துக்களை அழிக்காமல் இருப்பது.

    பதிலளிநீக்கு
  2. நாம் தான் நாடு என்ற புரிதல் எவருக்கும் இல்லை என்று தெரிகிறது...
    காவலர்கள் இல்லாமல் சாலைகள் வாகனங்களால் ஸ்தம்பித்து நிற்கும் பொழுது ஒரு சிலர் இறங்கி போக்குவரத்தை சீர் செய்து அவனும் சென்று நாமும் செல்ல வழி ஏற்படுத்துபவன்...
    பக்கத்து வீட்டில் இறந்து கிடக்கும் பொழுது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் அமைதியாக மகிழ்ச்சியை வெளிப் படுத்தாமல் சோகத்தில் துணை நிற்ப்பது...
    வீணாக ஓடி கொண்டிருக்கும் குடி நீர் குழாயை மூடி நீர் வீணாவதை தடுப்பது.
    கண் தெரியாத நபர்களுக்கு சாலையை கடக்க உதவி புரிவது.
    சக்கரத்தில் சேலை சிக்கி அல்லது துப்பட்டா சிக்கி பெண்கள் தவிக்கும் பொழுது உதவிக்கு செல்வது..
    பேருந்து பயணத்தில் வயதானவர்கள் நிற்ப்பதை கண்டால் தான் உட்கார்ந்த இடத்தில் இருந்து எழுந்து அவர்கள் உட்கார இடம் கொடுப்பது
    என்று திரும்பிய பக்கமெல்லாம் மனிதம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது...

    நாம் தான் நாடு என்று உணர்ந்திருந்தால்...
    நாம் நாட்டுக்கு என்ன என்ன செய்திருக்கிறோம் என்று அனைவராலும் கூற முடியும்...

    வரி கட்டுவதே நாம் நாட்டு மக்களுக்கு செய்யும் ஒரு மாபெரும் உதவி தான்..
    both sales tax and income tax

    பதிலளிநீக்கு
  3. நாம் செய்யவேண்டியது நல்ல அரசை ஜாதி, மதம்,கட்சி,இனம் பாராமல் தேர்ந்தெடுப்பது

    அந்த அரசு மக்களுக்கு அடிப்படை தேவையான கல்வி, உணவு,சுகாதாரம் தருவது.

    பதிலளிநீக்கு
  4. அவரவர்கள் (நாடும், நாமும்) கடமையை அவரவர்கள் சரி வர செய்தால் - இந்த கேள்வியே எழுந்து இருக்காது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. நாட்டுக்குச் செய்ய எவ்வளவோ இருக்கு.எங்கள் வீட்டுவாசலை அவரவரும் துப்பரவாக வைத்திருந்தாலே போதும்.வீட்டுக்கு வீடு ஒரு மரம் நட்டு வைத்தால் நாட்டில் நல்ல மழை பெய்யுமே !

    பதிலளிநீக்கு
  6. அடிப்படை உரிமைகள் மட்டுமல்ல,கடமையும் இருக்கிறது.நாடு என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால்தான் இந்நிலை.அதனால்தான் தேர்தலைக்கேலிக் கூத்தாக எடுத்துக்கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. நாடு என்பது எப்பவுமே நாட்டுத் தலைவர்களின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுவதன் (உ.ம்: இந்திரா என்றால் இந்தியா) விளைவாகவும் இதைக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். காந்தி போன்ற தலைவர்கள் இருந்தகாலத்தில், நாடு என்ற வார்த்தை எல்லாரையும் எழுச்சி கொள்ள வைக்கும்.

    இப்போதிருக்கும் தலைவர்களே இப்படி சலிப்படைய வைக்கிறார்கள் என்பது என் கருத்து.
    :-))))

    :-(((((

    பதிலளிநீக்கு
  8. // ஒன்றும் செய்யாமலிருப்பதே சில சமயம் நல்லது என்றும் தோன்றுகிறது! //

    HA.. Ha.. Ha...

    பதிலளிநீக்கு
  9. வரி கட்டுவது எப்படி நாட்டுக்கு செய்யும் நல்ல செயலாகும் என்பது தெரியவில்லை. வரிகளை ஒழிக்க வேண்டும். அப்பொழுது தான் எந்த நாடும் உருப்படும். வரிகள் தான் ஊழலுக்கே விதை.

    பதிலளிநீக்கு
  10. ஒவ்வொரு தனி மனிதரும் ஒழுக்கமா, நேர்மையா இருந்து, உயர்வு அடைய பாடு படறதுதான், நாட்டுக்கு அவங்க செய்ற மிகப் பெரிய தொண்டு.

    பதிலளிநீக்கு
  11. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குக் கூட தற்போதைய மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் பெயர்கள் தெரியவில்லை என்பதும் ஆச்சர்யம்.//

    எனக்கு ஆச்சரியமா இல்லை. வயித்தை எரியுது. அதிலும் பள்ளிப்பிள்ளைகளுக்கு ட்யூஷன் எடுத்தவள் சில காலம் என்ற முறையில் அவர்களுக்கு சினிமாவில் இருக்கும் ஞானம், (இங்கே அறிவு) மற்ற விஷயங்களில் இல்லை. அடுத்து கிரிக்கெட். :(((((

    பி.கு. இதற்கு பதில் போட்டால் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈளம் தாங்காதேனு யோசிச்சே இத்தனை நாட்கள் பதில் போடவில்லை.

    பதிலளிநீக்கு
  12. முதல்லே மக்கள்; தங்கள் தெரு, சுற்றுப்புறம் சுத்தமாய் வைக்கணும்.

    அடுத்து நிர்வாகம்/அல்லது இங்கே அரசு??? மக்களுக்கு உதவி செய்யணும். தெருப் பராமரிப்புக்கும், குப்பை அள்ளவும், தெரு நாய்களைப் பிடிக்கச் சொல்லியும் நகராட்சி நிர்வாகத்துக்கு எத்தனை முறை கடிதம்,இ-மெயில், எறும்பு மெயில், நேரிலே போய்ச் சொல்வதுனு! அலுத்தே போயிடும். ஒண்ணும் நடக்காது.

    அங்கே நிர்வாகம் செய்பவர்களும் வானத்தில் இருந்து நேரடியாகக் குதித்தவர்கள் அல்ல. நம் போன்ற சாமானிய மத்திய தர மக்களே. அவங்களும் இதே போன்றதொரு சூழ்நிலையில் தானே வாழ்கின்றார்கள்? அவங்களுக்கே இது கூச்சமாய் இல்லையா?

    கடமையைச் செய்யவேண்டாமா?

    பதிலளிநீக்கு
  13. இன்றைய பெரும்பாலான அரசுப் பணியாளர்கள் தங்கள் பணியைச் சரிவரச் செய்வதில்லை; சுணக்கம் காட்டுகிறார்கள் என்பதே உண்மை.

    அதிலும் நமக்கு விடுமுறைகள் வேறே அதிகம். வாரம் ஐந்து நாள் தான் வேலை நேரம். வெளிநாடுகளில் வாரம் ஐந்து நாட்கள் வேலை நேரம் என்றாலும் ஒரு வாரத்துக்கு 40 மணி நேரம் கட்டாயமாய் வேலை செய்தே ஆகவேண்டும். அந்த நாற்பது மணி நேரத்தை உங்கள் விருப்பம் போல் எடுத்துக்கொள்ளலாம்.

    நம் நாட்டில்?? சனி, ஞாயிறு விடுமுறை எனில் வெள்ளிக்கிழமை மத்தியானமே சீட்டில் ஆள் இருக்கமாட்டாங்க. திங்களன்று கேட்கவேண்டாம். திங்களோஃபோபியா வந்துடும். யாரும் பனிரண்டு மணிக்கு முன்னால் எட்டிக்கூடப் பார்க்க மாட்டாங்க.

    பதிலளிநீக்கு
  14. எனக்குத் தெரிந்த கிட்டத்தட்ட சொந்தக்காரப் பெண்மணி ஒருத்தர் தமிழக அரசுப்பணியில் இருப்பவர். இப்போதைய அரசு தங்கள் ஊழியர்களைக்கடுமையாக வேலை வாங்குகிறது என்றும், எப்போது வேண்டுமானாலும் மேலதிகாரிகள் ஆய்வுக்கு வந்துவிடுவார்கள்; கூடவே குறிப்பிட்ட துறையின் அமைச்சரும் வந்துவிடுகிறார் என்றும் எப்போதும் தாங்கள் பதில் சொல்லத் தயார் நிலையில் எல்லாத் தகவல்களையும் வைத்திருக்க வேண்டி இருப்பதாகவும் குறை கூறி வருந்தினார்.


    அரசு தன் ஊழியர்களைச் சம்பளம் கொடுத்துத் தான் வேலைக்கு எடுக்கிறது. ஊழியர்களும் சும்மா வேலை செய்வதில்லை. அதை உணர்ந்து கொண்டு கடமையைச் சரிவர ஊழியர்கள் செய்யவேண்டும் என அடுத்தடுத்து வரும் எல்லா அரசுகளும் ஊழியர்களை வற்புறுத்த வேண்டும். நிர்வாகம் அப்போதே சீராக ஆகும். சீரான நிர்வாகம் இருந்தாலே அடிப்படைக்கட்டமைப்புக்களைச் சரியாகக் கொடுத்து அவற்றைப் பராமரிக்கவும் முடியும்.

    இது எதுவும் இல்லாமல் மக்களே செய்து கொள்ளலாம் சில விஷயங்களை. உதாரணத்திற்கு அவங்க தெருவைச் சுத்தமாய் வைத்திருத்தல், சாலை சரியில்லை எனில் தெருக்காரர்கள் கூடிச் செப்பனிடுதல், விளக்குகள் எரியவில்லை எனில் அனைவரும் கூடிப் புகார் செய்து அதை மாற்ற முயலுதல், குடிநீர் வரவழைத்தல், துப்புரவுப் பணியாளர்கள் மூலம் சாக்கடைகளைச் சுத்தம் செய்தல்னு எல்லாவற்றையும் அந்த அந்தத் தெருக்காரர்கள் ஒன்று கூடிச் செய்யலாம். இவை நாட்டுக்குச் செய்கிறோம் என்ற நினைப்பில்லாமல் நமக்கு நாமே செய்து கொள்கிறோம் என எண்ண வேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. கை வலிக்குது! :))))))இப்போதைக்கு அம்புடுதேன், வர்ட்ட்ட்டா????

    பதிலளிநீக்கு
  16. கை வலிச்சாலும் மனசு லேசாகியிருக்கணுமே ... உங்கள் அம்பத்தூர் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு அனுபவங்கள் படிச்சிருக்கோமே.. !!

    பதிலளிநீக்கு
  17. கை வலிச்சாலும் மனசு லேசாகியிருக்கணுமே ...//

    ஹிஹிஹி, அதெல்லாம் சமாளிச்சுக்குவோமில்ல!

    // உங்கள் அம்பத்தூர் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு அனுபவங்கள் படிச்சிருக்கோமே.. !!//

    ரொம்பப் பேர் இப்படித்தான் படிச்சிருக்கிறதாச் சொல்றாங்க. ஆனால் பின்னூட்டம் தான் போடறதில்லை! :P

    பதிலளிநீக்கு
  18. தப்பா நினைக்காதீங்க கீதா சாம்பசிவம்.. முன்னாள் ஜனாதிபதிகள் பெயரைத் தெரிஞ்சுகிட்டு என்ன ஆகப்போவுது? வாழ்க்கையில் எந்த விதத்தில் அது உதவும் (ஏதாவது மிலியனேர் புதிர் விளையாட்டைத் தவிர)? அதற்குப் பதில் வாழ்க்கைக்குத் தேவையானதை சொல்லிக் கொடுக்கலாமே? இன்னொரு பதிவில் moral science என்ற வகுப்பு இப்போதெல்லாம் எடுப்பதேயில்லை என்று யாரோ எழுதியிருந்தார்கள். ஜனாதிபதி பெயரை விட, moral science தேவையென்று படுகிறது. சினிமா க்ரிகெட்டில் இருக்கும் ஞானம்... வேறு விஷயம்.

    மாஞ்சு மாஞ்சு எழுதியிருக்கீங்க civic sense and sense of duty பத்தி :) உண்மை. சின்ன விஷயம் கூட பெரிய சிக்கலாகும் வக்கிரம் இந்தியாவை விட்டு ஒழியாதது வருத்தமே. நமக்கு நாமே செய்து கொள்கிறோம் என்ற எண்ணம் - சரியாகச் சொன்னீர்கள். நம்மால் தான் நாடு நலம் பெறும்.

    இப்படி சொல்லிட்டீங்க இல்லே? இனிமே பின்னூட்டமா குவியப் போகுது பாருங்க.. குடுகுடுகுடுகுடு..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!