Sunday, December 4, 2016

ஞாயிறு 161204 :: யானையும் வானமும். யானையும் வானமும்.தாய்லாந்தில் யானையைத் தந்தத்திற்காகக் கொல்லக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. தந்தப் பொருட்களை வாங்குவதும் வைத்திருப்பதும் அங்கு தண்டனைக்குரிய குற்றம். 
யானைக்குத் தந்தம் வரமா சாபமா? கோவில்களில் யானைகளை நன்றாகப் பராமரிக்கிறார்களா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
(‘நாமூவங்க் சஃபாரி பார்க், தாய்லாந்த்)


படங்களும் தகவல்களும் நெல்லைத்தமிழன் 

Saturday, December 3, 2016

Wednesday, November 30, 2016

ன் த பு 161130 :: கங்டிபிடுண்க !!

       
சென்ற  வாரப்  புதிர்க்  கேள்விகள்  கேட்டிருந்த  பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு நன்றி. 

அங்கேயே அவர்  வந்து, கருத்துரையாக,  யார்  யார்  சரியான  பதில்கள்  கூறினார்கள்  என்று  கூறி, அவர்களை  சிலாகித்து  நான்கு  வரிகள்  எழுதுவார்  என்று  உங்கள்  எல்லோர்  சார்பிலும்,  நானும்  நினைத்தேன். 

இன்னும்  அவர்  பதில்  அளிக்கவில்லை!  

இன்றைக்கு  அவர்  அந்தப்  புதிர்ப்  பக்கத்தில்  பாராட்டுகளை  அளிப்பார்  என்று  ஆவலோடு  எதிர்பார்க்கின்றேன்!  


திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் தற்சமயம் சென்ற வார புதிர்களுக்கான விடைகளை அனுப்பி இருக்கிறார்.  

சென்ற வார புதிருக்கான விடைகள்:

படங்களில் ஒளிந்திருந்த பதிவர்கள்: நெல்லை தமிழனும், கோமதி அரசுவும். சரியான விடையை முதலில் கூறிய மிடில் க்ளாஸ் மாதவிக்கு பாராட்டுக்கள். 

இரண்டாவது கேள்விக்கான சரியான விடையை முதலில் கூறிய நெல்லை தமிழனை பாராட்டுகிறோம்.

மூன்றாவது கேள்வி கொஞ்சம் கௌதமத்தனமானது. எந்த ஆண்டு ஞாயிற்றுக் கிழமை துவங்கி சனிக் கிழமை முடிகிறதோ அந்த ஆண்டே ஒரு முழுமையான காலண்டர் இயர் எனப்படும்.

கலந்து கொண்டவர்களுக்கும், என்னையும் குவிஸ் மாஸ்டராக்கிய எங்கள் ப்ளாகுக்கும் நன்றி நன்றி! நன்றி!


இந்த  வாரப்  புதிர்கள்  இங்கே:    

இங்கே ஒளிந்திருக்கும்  ஊர், விஞ்ஞானி, நடிகர் ஆகியோரைக்  கண்டுபிடியுங்கள். 


1)  GINA SAVE JANSI


2) SAMSAN LOVE A THODI


3) AH I AM UR NATPUTHAN RV 


 
Tuesday, November 29, 2016

கேட்டு வாங்கிப்போடும் கதை :: அப்பாவின் கம்பீரம்


     எங்களின் இந்த வார 'கேட்டு வாங்கிப் போடும் கதை'ப் பகுதியில்  வயதிலும் பதிவுலகிலும் மூத்த பதிவர்களில் ஒருவரான திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் கதை இடம் பெறுகிறது.

     அவர்கள் தளம் எண்ணங்கள்.

     கண்ணனுக்காக, சாப்பிடலாம் வாங்க, பேசும்பொற் சித்திரமே, என் பயணங்களில், ஆன்மீகப் பயணம் என்று பல்வேறு தளங்களுக்குச் சொந்தக் காரர்.  நகைச்சுவை உணர்வு மிக்கவர்.  ஆன்மீக விஷயங்களில் கில்லாடி.  அதில் மட்டுமா?  சமையல் விஷயத்திலும் இவரை அடித்துக் கொள்ள முடியாது!  பெருமையும், நட்புணர்வும் மிக்க எங்கள் வாசகிகளில் ஒருவர்.  எங்களின் எல்லாப் பதிவுகளையும், எதையும் மிஸ் செய்யாமல் இவர் எங்களை ஊக்குவிப்பதில் முதலிடத்தில் இருக்கிறார் என்றே சொல்லலாம்.

     இவர் கதை எதுவும் எழுதியதாய் எனக்கு நினைவில்லை.  எனினும், இவரிடமிருந்து கதை எழுதி  வாங்காவிட்டால் எப்படி என்று விடாமல் அவரை நச்சரித்ததில், பார்த்தால் ஏற்கெனவே ஒன்று எழுதி இருக்கிறார்!

     கேட்டு வாங்கிட்டோம்ல....!

     அவரின் முன்னுரையைத் தொடர்ந்து அவர் எழுதிய கதை...


===================================================================


எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் நம்மளைப் பத்தித் தெரிஞ்சுதான் கதை கொடுங்கனு கேட்கலைனு நினைச்சால்!  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விடலை! விடாக்கண்டன் கொடாக்கண்டனாகக் கதை, கதைனு புலம்பல்.  நமக்கோ மேல் மாடி காலி!  என்னத்தை எழுதறது!


இது ஏற்கெனவே முன்னர் ஒரு பதிவாக எழுதி ஜீவி சார் கூடப் பாராட்டி இருந்தார்.  'ஆஹா'னு இதைப் பத்தி நினைவில் வரவே ஒரு சில திருத்தங்களுடன் ஶ்ரீராமுக்கு அனுப்பி  வைச்சிருக்கேன்.  இனி அவர் பாடு, உங்க பாடு!  பெரிசாக் கருத்துகள் எதையும் எதிர்பார்க்கலை.  சட்டியில் ஏதும் இல்லாதபோது அகப்பையில் என்ன வரும்?  ஆகவே யாரும் எதுவும் சொல்லலைனாக் கூட வருத்தம் இல்லை!


================================================================

டிஸ்கி:  சில பல பழைய விஷயங்களைத் தோண்டிக்கொண்டிருந்தப்போ கிடைச்ச ஒரு விஷயத்தைக் கதை மாதிரி, கவனிக்கவும், கதை மாதிரிதான். ஆக்கி இருக்கேன்.


பெரிய டிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கி:  ஹிஹிஹி, இது மலரும் நினைவுகள் இல்லை.


================================================================அப்பாவின் கம்பீரம்!
கீதா சாம்பசிவம்


அப்பாவைப் பார்த்தாலே எங்களுக்கு நடுக்கம் தான்.  தொலைவில் வரும்போதே தெரிந்து விடும்.  இன்னிக்கு என்ன மூடில் வராரோனு பயமாவும் இருக்கும்.  யார் மாட்டிப்பாங்களோனு நினைப்போம்.  அநேகமா அம்மா தான் மாட்டிப்பா.  அம்மாவை அப்பா உண்டு, இல்லைனு பண்ணிடுவார்.  அப்பாவுக்குத் தெரியாமல் ஒரு தூசி கூட அந்தண்டை, இந்தண்டை நகர முடியாது;  நகரவும் கூடாது.  சமையலறையில் கூட அம்மா ஒரு பாத்திரத்தைத் தன் செளகரியத்துக்கு ஏற்ப இடம் மாற்ற முடியாது.  அப்பா கத்துவார்.  அந்தப் பாத்திரம் முன்னிருந்த இடத்துக்கு வரும் வரையிலும் விட மாட்டார்.  ஒரு விதத்தில் பிடிவாதம்னு தோன்றும் இது இன்னொரு விதத்தில் சாமான்களை வைச்ச இடத்தில் வைக்கத் தானே சொல்கிறார்னும் தோணும்.  அம்மா என்ன இதுக்குப் போய் அலட்டிக்கிறானும் நினைச்சுப்பேன்.

எங்கள் அனைவரையும் அடக்கி ஆளும் அப்பாவின் சாமர்த்தியத்தையும், கம்பீரத்தையும் நினைச்சால் கொஞ்சம் பெருமிதமாக இருக்கும்.  அவருக்கு அடங்கிப் போகும் அம்மாவை நினைச்சால் கொஞ்சம் எரிச்சலாகவே இருக்கும்.  அப்பா சொல்வது தான் சரி; செய்வது தான் சரி;  இந்த எண்ணம் எனக்குள் ஊறிப் போயிருந்ததுனு சொல்லலாம்.  அம்மாவிடம் அன்பு இருந்தாலும் அப்பாவுக்கு அடங்கித் தானே போறா என்ற அலக்ஷியமும் இருந்தது.  ஒரு தரம் அம்மா கிட்டேக் கேட்டேன். "நீ பெரியவளா? அப்பா பெரியவரா?

"சந்தேகமே இல்லாமல் அப்பாதான் பெரியவர். என்னை விட வயசிலேயும் பெரியவர்! இந்தக் குடும்பத்தை அவர் தானே கவனிச்சுக்கிறார்!" 

"அப்போ நீ?"

"அப்பாவுக்கு அப்புறம் தானே நான்!" சகஜமான குரலில் தான் அம்மா சொன்னாள்.

"ஆனால்..... மாதா, பிதா,குரு, தெய்வம்னு சொல்லிக் கொடுக்கிறாங்க.  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னும் படிக்கிறேனே.  என்னோட படிக்கிற எல்லாருமே அவங்க அவங்க அம்மாவைப் பத்தித் தான் பேசறாங்க.  இங்கே சமையல் கூட அப்பா சொல்றது தான் நீ செய்யறே. எங்களுக்கும் செய்து கொடுக்கிறே!  ஏன் அப்படி?"

"ஏன்னா, அப்பா ஒருத்தர் தானே நம்ம வீட்டிலே சம்பாதிக்கிறார்.  அதான்."

"என்னோட நண்பர்கள் வீட்டிலேயும் அவங்க அவங்க அம்மா சும்மாத் தான் வீட்டிலே இருக்காங்க.  எல்லாரும் வேலைக்குப் போகறதில்லை."

"என் கண்ணே," என அணைத்துக் கொண்ட அம்மா, பதிலே சொல்லவில்லை. எனக்கு என்னமோ எதுவும் புரியவில்லை. ஆனாலும் அம்மா மேற்கொண்டு விளக்கவில்லை! அக்கம்பக்கம் உள்ளவர்கள் கூட எல்லாம் சகஜமாக சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டு பேசும் அப்பா வீட்டில் மட்டும் ஏன் இப்படி இருக்கணும்! அதான் எனக்குப் புரியாத புதிர்! அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் எங்க அப்பா இப்படினு சொன்னால் நம்பக் கூட மாட்டாங்க! ஆனால் அம்மா சொல்வதை மட்டும் கேட்கும் அப்பாவாக அவரை நினைத்தும் பார்க்க முடியவில்லையே! எதுவானாலும் அப்பாதான் முடிவு செய்யணும்! நாங்கல்லாம் லீவுக்குத் தாத்தா வீட்டுக்குப் போறதுனாலும், சரி, தீபாவளிக்குப் பண்ணின பக்ஷணத்தைத் தின்பதாக இருந்தாலும் சரி, அப்பாவின் உத்தரவு இல்லாமல் முடியாது! சர்வ வல்லமை படைத்தவர் நம்ம அப்பா! இவரை மாதிரி மத்த அப்பாக்களெல்லாம் இல்லை! அவங்கல்லாம் அசடுனு நினைச்சுப்பேன். 

அன்று சாயங்காலமாக அலுவலில் இருந்து வந்த அப்பா காபி சரியில்லை என ஒரு பாட்டம் அம்மாவோடு சண்டை போட்டார்.  இது கூடத் தெரியாமல் என்ன பொம்மனாட்டி! என்ற வழக்கமான கத்தல்.  பின்னர் வழக்கம் போலக் கோயிலுக்குப் போய் விட்டார்.  வீட்டிலே என்ன சண்டை நடந்தாலும், அப்பா தன் வரையில் எதுவும் பாதிக்காதவராகவே இருப்பார்.  அம்மாதான் அழுது கொண்டிருப்பாள்.  அப்பா அதையும் லக்ஷியம் செய்ததாகத் தெரியவில்லை.  அன்று விளையாடும்போது என் சிநேகிதர்களில் யாரோட அப்பா வீரமானவர்னு ஒரு பேச்சு வரவே, நான் "எங்க அப்பா தான்!" என்று அடித்துச் சொன்னேன்.  அதற்கான காரணங்களையும் கூறினேன்.  பக்கத்து வீட்டு கோபு சிரித்தான்.  "உங்க அப்பா பயந்தாங்க்கொள்ளி!" எனச் சீண்டினான்.  எனக்கு வந்த கோபத்தில் அவனோடு "டூ" விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

ராத்திரி ஏழு மணி இருக்கும்.  அம்மா கொல்லையிலே பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.  திடீர்னு ஒரு அலறல்.  "என்னம்மா, என்ன கொஞ்சறியா?  என்ன அங்கே சப்தம்?" அப்பா கடுமையாகக் கேட்க, அம்மா, "ஒரு பெருச்சாளி, எப்படியோ சமையலறையில் புகுந்திருக்கு.  அது காலில் ஏறிடுத்து.  கத்தவே எங்கேயோ போய் ஒளிஞ்சுண்டிருக்கு."  என்றாள்.

அப்பா திடுக்கிட்ட குரலில், "என்ன பெருச்சாளியா?" என்றார்.

"ஆமாம், அப்படித் தான் இருந்தது."

"சரியாச் சொல்லித் தொலை;  நிஜம்மா பெருச்சாளியா?"

"ஆமாம், ஆமாம், இதோ மறுபடி வெளியே வரப் பார்க்கிறது.  அடுப்பு மேடைக்குக் கீழே போய் ஒளிஞ்சிட்டு இருக்கு."

அப்பா படபடவென எங்களை எல்லாரையும் அழைத்தார்.  நாங்க வேடிக்கை பார்க்கச் சென்றவர்கள், அப்பா இப்போ அதை அடிக்கப் போகிறார்;  குறைந்த பக்ஷமாக அதை விரட்டவாவது முயற்சி செய்வார் என நினைத்துக் கொண்டு, "என்ன அப்பா, உனக்கு நாங்களும் உதவி செய்யட்டுமா?" எனக் கேட்டோம்.  அப்பா எவ்வளவு கம்பீரமானவர்!   அம்மாவையும் அடக்கி ஆள்பவர்.  இந்த வீட்டில் எதுவும் அவருக்குத் தெரியாமல் எதுவுமே நடக்காது.  அப்படி இருக்கையில் ஒரு பெருச்சாளி எம்மாத்திரம்!  விரட்டித் தள்ளிட்டுத் தான் மறு வேலை பார்ப்பார். அவரைக் கேட்காமல் இந்தப் பெருச்சாளி உள்ளே வந்ததற்கு இன்னிக்கு அதுக்கு இருக்கு மண்டகப்படி! இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டு தம்பியிடமும் மெதுவாகச் சொன்னேன். 

"பார், இப்போ வேடிக்கையை! அப்பா அந்தப் பெருச்சாளியை ஒரு கை இல்லை இரண்டு கையாலேயும் பார்க்கப் போகிறார்!" என்றேன் பெருமையுடன். அப்பா மறுபடியும் எங்களை எல்லாம் அழைக்கவே எங்களையும் அம்மாவையும் உள்ளே உட்கார்த்தி வைத்துவிட்டுப் பெருச்சாளியோடு யுத்தம் செய்யப் போகிறார் என்று மகிழ்ச்சியுடன் சென்றேன். கூடவே அண்ணாவும், தம்பியும். 

நாங்கள் வந்ததும் அப்பா எங்களை அழைத்துக்கொண்டு, கிட்டத்தட்டத் தரதரவென இழுத்துக்கொண்டு, படுக்கை அறைக்குள் சென்றார்.  எங்களை அங்கே தள்ளிக் கதவைச் சார்த்தப் போகிறார் என நினைத்தேன்.  கிட்டத்தட்ட நடந்ததும் அதுவே.  ஆனால் அப்பாவும் கூடச் சேர்ந்து எங்களோடு உள்ளே வந்துவிட்டார்.  கம்பு ஏதானும் தேடறாரோனு நினைச்சேன்.  இல்லை; கம்பெல்லாம் தேடலை. கதவை அழுத்தித் தாழ்ப்பாள் போட்டுவிட்டுக் கீழே சுவர் ஓரத்தில் ஓட்டைகள் ஏதும் இல்லையேனு பார்த்துக் கொண்டார். பாதுகாப்பாக ஓர் மூலையில் போய் நின்று கொண்டார். எங்களையும் ஓரமாக உட்காரச் சொல்லிக்  கட்டளை இட்டார்.  பின்னர்  இங்கிருந்தே அம்மாவுக்குக் குரல் கொடுக்கிறார். 

"மெதுவா அந்தப் பெருச்சாளியை விரட்டப் பாரு.  உன்னால் முடியலைனா அக்கம்பக்கம் யாரையானும் அழைச்சுக்கோ.  நான் இங்கே குழந்தைங்களை பத்திரமாப் பார்த்துக்கறேன்."

கடவுளே, இதுவா என் அப்பா? இதையா நான் எதிர்பார்த்தேன், ஜன்னல் வழியாக அம்மா என்ன செய்கிறாளோ என்று கவலையுடன் பார்த்தேன். அங்கே அம்மா எதுக்கும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால்........

அம்மாவின் இதழ்களில் இகழ்ச்சியான (?) சிரிப்பு ஓடியதாக எனக்குத் தோன்றியது.

அப்பா கம்பீரம் இழந்து விட்டார்.

Monday, November 28, 2016

"திங்க"கிழமை 161028 :: மசாலா இட்லி ! அப்போ தோசை இப்போ இட்லி!     தோசையில் செய்வது போல இட்லியிலும் செய்தால் என்ன என்று தோன்றியதும் அடுத்து அதையும் செய்து பார்த்து விட்டோம்.  பார்க்கத்தான் பார்த்தீர்களா?  சாப்பிடவில்லையா என்று கேட்காதீர்கள்!  நொடியில் காணாமல் போனது!
 
 
 
 
     இட்லிக்கு இது சரியாக வருமா என்கிற சந்தேகம் இருந்தது.  எனினும் முந்தைய தோசை அனுபவத்தில் இட்லிக்கு காரம் சற்று தூக்கலாகச் சேர்க்க முடிவு செய்தோம்.  ("இதெல்லாம் பழக்கப் படுத்தாதீங்க..  அப்புறம் சாதாரண இட்லியே சாப்பிட மாட்டாங்க பசங்க..." - பாஸ் )
 

 
 
     இன்றிரவு இட்லி என்றால் மற்ற சிற்றுண்டிகளுக்கு முன்னால் சற்று இளப்பமாகவே தோன்றும் எங்கள் வீட்டில்.  சரி,.. இட்லியில் நம் கைவரிசையைக் காண்பிப்போம் என்று களம் இறங்கினோம்!  (ம்ம்..  பெரிய ஜுனியர் விகடன், நக்கீரன் டீம் என்று மனதில் நினைப்பு)
 
 
  

 
 
 
  
 
     அதே போலத்தான், ஆனால் தக்காளி மிஸ்ஸிங்.  நீர்த்துப்போய் இட்லி சரியாக வராதோ என்று சந்தேகம்.  
 
 
 
 
 
     எனவே வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் (சற்று அதிகமாகவே) பூண்டு சில பற்கள், உப்பு, அப்புறம் சற்று யோசித்து மசாலா பாக்கெட்டைப் பிரித்து அதிலிருந்து லவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், என்று ஓரிரண்டு பொருட்களை உதிர்த்துக் கொண்டோம்.
 

 
 
     ஒரு ஈட்டில் 24 இட்லிகள் வரும் என்பதால் அதற்கான மாவைத் தனியாக எடுத்து அந்த அளவில்தான் இதைத் தயார் செய்து கலந்தோம்.  தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை என்றாலும் பாஸ் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு தக்காளி சட்னி செய்திருந்தார்.
 
 

 
 
     கலர்ஃபுல் மட்டுமல்ல, சுவையாகவும் இருந்தது என்பதற்கு உடனே காலியான இட்லிகள் சாட்சி!  எப்போதும் நான்கு அல்லது ஐந்து இட்லிகளை மட்டும் வைத்துக் கொண்டு பத்து நிமிடம் சாப்பிடும் இளையவன் "நான்கு இட்லி உள்ளே போன வேகமே தெரியலையே.." என்று சிலாகித்தான்.  
 
 
     
     சாதாரணமாக அவனிடமிருந்து அப்படி கமெண்ட் கிடைக்காது!  நொடியில் காலியாகி வெற்றுடலாகக் காட்சியளித்த இட்லித் தட்டுகளை ஏக்கமாகப் பார்த்தபடி இருந்தன நான்கு குழந்தைகள்.  (என் மகன்கள் இருவர், அண்ணன் மகன் ஒருவன், அப்புறம் நான்...  ஹிஹிஹி)
 
 
     24 இட்லிகள் இட்டதும் என்ன ஆச்சு என்றால் கொஞ்சம் இந்த "ஸ்பெஷல் மாவு" ( ! ! ) மிஞ்சியது.  குட்டி இட்லி இடலாமா என்றால் குக்கர் மூடாமல் மக்கர் செய்ய, தனி குக்கரில் வைத்து விடலாம் என்று முடிவெடுத்து, தனிக்குக்கரில் இட்லித் தட்டில் வைக்காமல் அந்த மாவை அப்படியே ஒரு குட்டி பேசினில் மொத்தமாகக் கொட்டினோம்.  
 
 
 
 
 
     அதில் குடைமிளகாய், சின்ன வெங்காயம், கொத்துமல்லி, சின்ன தக்காளியில் பாதி ஆகியவற்றை பொடியாக நறுக்கிப் போட்டுக் கிளறி மூடி குக்கரில் வைத்தோம்.  இறக்கி வெளியே எடுத்து கேக் போல துண்டங்களாக்கிச் சாப்பிடலாம் என்று ஐடியா!  ஆனால் வழக்கமான இட்லி போலவே 14 நிமிடங்கள் வைத்தது நாங்கள் செய்த தவறு.  பேசின் என்பதால் கொஞ்சம் நேரம் கூடுதலாக வைத்திருந்திருக்க வேண்டும்.
 
 

 
 
     எனவே எடுத்துக் பார்த்தபோது கேக் சரியாக வேகாமல் இருக்க, அதை ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் இதை போட்டு லேசாகக் கிளறி இறக்கி நல்லெண்ணெய் மேலாகத் தடவிச் சாப்பிட்டால்...
 
 

 
 
     முன்னர் சாப்பிட்ட இட்லியைத் தோற்கடித்தது இது!
 
      எனவே அடுத்த தரம் இட்லி வார்க்கும்போது இந்த மாதிரிக்கு கலவை செய்த பின் அதில் குடைமிளகாய், வெங்காயம், ஆகியவற்றைத் துருவிச் சேர்க்க முடிவு.  

Sunday, November 27, 2016

ஞாயிறு 161127 :: Dog's View


                                


What is he thinking?